விசைத்தறிகளை இன்று முதல் நிறுத்தி போராட்டம்


விசைத்தறிகளை இன்று முதல் நிறுத்தி போராட்டம்
x

விசைத்தறிகளை இன்று முதல் நிறுத்தி போராட்டம்

திருப்பூர்

மங்கலம்,

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறிகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கோவை-திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

மங்கலத்தை அடுத்த கோம்பக்காட்டு புதூர் பகுதியில் உள்ள சிவசக்தி மஹால் திருமண மண்டபத்தில் நேற்று கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சோமனூர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சோமனூர் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார். இதில் சோமனூர் சங்க நிர்வாகிகளான துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி, கிளை நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

சாதாரண விசைத்தறிக்கு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை தமிழக அரசு திரும்ப பெற்று, சாதாரண விசைத்தறிக்கு முழு விலக்கு அளித்து விசைத்தறி தொழிலையும், பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களையும், சார்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் அரசு காப்பாற்ற வேண்டும்.

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 8 ஆண்டுகளாக கூலி உயர்வு இல்லாமல் சிரமப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில் விசைத்தறிக்கு மின்கட்டணத்தை உயர்த்தும் அறிவிப்பு வந்தவுடன் கோவை-திருப்பூர் 2 மாவட்ட கூட்டுக்கமிட்டி சார்பில் முதல்-அமைச்சர், அமைச்சர், ஆணையத்தலைவர், மின் வாரிய தலைவர் அனைவருக்கும் சாதாரண விசைத்தறிக்கு மின் கட்டண உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பினோம். ஆனாலும் சாதாரண விசைத்தறிக்கு மின்கட்டணத்தை உயர்த்தி உள்ளது.எனவே உயர்த்திய மின் கட்டணத்தை சாதாரண விசைத்தறிக்கு முழுமையாக விலக்கு அளித்து விசைத்தறி தொழிலை பாதுகாக்க வேண்டும்.

போராட்டம்

சாதாரண விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டண அளவில் கணக்கீடு செய்யப்படும் மின் கட்டணத்தை சாதாரண விசைத்தறியாளர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக முழுமையாக மின் கட்டணம் கட்டாமல் இருந்து எதிர்ப்பை தெரிவிப்பது, உயர்த்திய 30 சதவீதம் மின் கட்டணத்தையும் ஆண்டுக்கு 6சதவீதம் உயர்வையும் முழுமையாக விலக்கு அளித்து அரசு அறிவிக்கும் வரை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியில் இருந்து விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் சோமனூர் சங்கம் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களிலும் விசைத்தறி உரிமையாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு போராட்டங்களை வெற்றியடையச் செய்ய வேண்டும் எனவும் சோமனூர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



Next Story