பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்டம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனுர், மூலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்குவிளையும் பூக்களை விவசாயிகள் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பாக்கெட் போட்டு உள்ளூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கொண்டு சென்று பெண்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். உதிரிப் பூக்களை வாங்கிய பூ வியாபாரிகள் பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாலும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் உதிரிப்பூக்களைபிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளுர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். நேற்று குண்டு மல்லி ஒரு கிலோ ரூ.1100-க்கும், முல்லைப் பூ ரூ.1000-க்கும், ஜாதி மல்லி ரூ. 1000-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், அரளி ரூ.340-க்கும், ரோஜா ரூ.280-க்கும், செவ்வந்தி ரூ.280-க்கும் வாங்கிச் சென்றனர். வரத்து குறைவாலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.