அரிசி விலை கிடு,கிடு உயர்வு
திருவாரூரில் அரிசி விலை கிடு,கிடு வென உயர்ந்துள்ளது. 1 கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
திருவாரூரில் அரிசி விலை கிடு,கிடு வென உயர்ந்துள்ளது. 1 கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
அரிசி ஆலைகள்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இந்த குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடிசெய்யப்படும். தமிழகத்தின் உணவு தேவையின் பெரும் பகுதியை ஒருங்கிணைந்த தஞ்சை பூர்த்தி செய்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா,தாளடி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் விளையும் நெல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் திருவாரூரில் உள்ள அரிசி ஆலைகளுக்கும் அனுப்பப்பட்டு பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்படும். மேலும் தனியார் கொள்முதல் செய்யும் நெல், அரிசி ஆலைகள் மூலம் அரவை செய்யப்பட்டு கடைகளுக்கு அரிசியாக விற்பனை செய்யப்படும்.
விலை உயர்வு
கடந்த ஆண்டு சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டதால் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணியை தொடங்கினர். கடந்த ஆண்டு பெய்த மழையில் பாதித்த நெல்லை பூச்சி மருந்து, உரம் போட்டு நல்ல முறையில் அறுவடைக்கு தயாா் படுத்தினர்.இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பெய்த மழையால் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விட்டது.
மேலும் வழக்கத்தைவிட நெல் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துவிட்டனர். ஆனால் தனியார் வியாபாரிகள் வழக்கமான விலையை விட கூடுதல் விலை கொடுத்து நெல்லை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அாிசி விலை கிடு, கிடுவென உயர்ந்து விட்டது. ரூ.26-க்கு விற்கப்பட்ட 1 கிலோ ஐ.ஆர்.20 ரூ.35-க்கு விற்கப்படுகிறது. ரூ.40-க்கு விற்கப்பட்ட கர்நாடக பொன்னி ரூ.52-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.32-க்கு விற்பனையான இட்லிஅரிசி ரூ.40-க்கு விற்பனையாகிறது.
மழையால் மகசூல் பாதிப்பு
அதே போல் 30 கிலோ பை மைசூர் பொன்னி ரூ.1,300 முதல் ரூ.1,850 வரை விற்பனையாகிறது. 26 கிலோ தமிழக பொன்னி ரூ.950 முதல் ரூ.1600 வரை விற்பனையாகிறது. 26 கிலோ இட்லி அரிசி ரூ.1000 முதல் ரூ.1,200 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் முன்கூட்டியே திறக்கப்பட்டது. அதனால் விவசாயிகள் குறுவை, சம்பா பரப்பை அதிகப்படுத்தி சாகுபடி பணிசெய்து வந்தனர்.
ஆனால் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டு உற்பத்தி பாதித்தது. பெரும்பாலான விவசாயிகள் அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனர். ஆனால் வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கி விற்பனை செய்யவேண்டி உள்ளது. 1 கிலோவுக்கு ரூ.8 முதல் 10 வரை உயர்ந்துள்ளது. நெல்லின் விலையை அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால் அரிசி விலை அதிகரித்துள்ளது என்றனர்.