'எள்' விலை தொடர்ந்து ஏறுமுகம்
எள்ளின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தாயில்பட்டி,
எள்ளின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
எள் சாகுபடி
வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரகோட்டை, சிப்பிப்பாறை, ஏழாயிரம்பண்ணை, ஊத்துப்பட்டி, பாண்டியாபுரம், தாயில்பட்டி, வால்சாபுரம், கீழக்கோதைநாச்சியார்புரம் ஆகிய பகுதியில் 150 ஏக்கரில் எள் சாகுபடி செய்தனர்.
தற்போது எள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விளைச்சலை தொடங்குவதற்கு முன்பாக குவிண்டாலுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது. ஆதலால் அறுவடைக்கு பின்னர் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்.
விலை ஏறுமுகம்
இதுகுறித்து கீழ கோதை நாச்சியார்புரம் விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது:-
வெம்பக்கோட்டை பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனர். எள் சாகுபடி என்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தை தராது. பராமரிப்பு எளிது. குறைவான அளவு உரம் போட்டால் போதும். ஆதலால் எப்போதும் எள்ளினை விவசாயிகள் விரும்பி சாகுபடி செய்வர்.
தற்போது எள் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விருதுநகர், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து எள்ளினை வாங்கி செல்கின்றனர். 2 கிலோ எள்ளில் இருந்து 1 லிட்டர் எண்ணெய் எடுக்கலாம். கடைகளில் 1 லிட்டர் எண்ணெய் ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. லிட்டருக்கு ரூ.200 கிடைக்கும் என்பதால் தாங்களும் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிேறாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.