தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.15 விலை வீழ்ச்சி
தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.15 விலை வீழ்ச்சி
குன்னூர்
குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் நீலகிரியில் தயாரிக்கும் தேயிலைத்தூள் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஏலம் நடைபெறுகிறது. இந்த நிலையில் விற்பனை எண் 26-க்கான தேயிலைத்தூள் ஏலம் கடந்த 30, 1-ந் தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 24 லட்சத்து 49 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 18 லட்சத்து 55 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 5 லட்சத்து 94 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.
பின்னர் நடந்த ஏலத்தில் 79 சதவீத தேயிலைத்தூள் விற்பனையானது. மேலும் அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.15 விலை வீழ்ச்சி ஏற்பட்டது. விற்பனையான தேயிலைத்தூளின் அளவு 19 லட்சத்து 7 ஆயிரம் கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.14 கோடியே 88 லட்சம். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.241, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.273 ஆக இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.61 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.130 முதல் ரூ.191 வரை ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.63 முதல் ரூ.68 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.180 முதல் ரூ.205 வரை விற்பனையானது. இந்த விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். விற்பனை எண் 27-க்கான ஏலம் வருகிற 7, 8-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 24 லட்சத்து 43 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.