ரூ.120-க்கு விற்று திகைக்க வைத்த தக்காளி விலை பல மடங்கு சரிவு


ரூ.120-க்கு விற்று திகைக்க வைத்த தக்காளி விலை பல மடங்கு சரிவு
x
தினத்தந்தி 2 Sept 2023 2:30 AM IST (Updated: 2 Sept 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

ரூ.120-க்கு விற்று திகைக்க வைத்த தக்காளி விலை பல மடங்கு சரிந்து திண்டுக்கல்லில் நேற்று கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆனது.

திண்டுக்கல்

தக்காளி

அசைவம், சைவம் என அனைத்து வகை சமையலிலும் இடம்பிடித்தது தக்காளி. இந்த, செக்க சிவந்த தக்காளி சேராமல் எந்த சமையலும் ருசிப்பதில்லை. இதனால் குளிர்சாதன பெட்டியில் தக்காளி குறையாமல் இருக்குமாறு பெண்கள் பார்த்து கொள்வார்கள். இத்தகைய தக்காளியின் பெயரை கேட்டாலே பெண்கள் அச்சப்படும் நிலை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஏற்பட்டது.

பருவமழை பொய்த்து போனதால் காய்கறிகளின் உற்பத்தி குறைந்தது. இதனால் அனைத்து வகை காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்தது. குறிப்பாக தக்காளி, சின்னவெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. இதில் ஒரு கிலோ இஞ்சி ரூ.400-க்கும், பூண்டு கிலோ ரூ.250-க்கும் விற்றது.

விலை உயர்வு

இஞ்சி, பூண்டு ஆகியவற்றை பொறுத்தவரை சமையலில் மிகவும் குறைந்த அளவே சேர்க்கப்படும். சைவ சமையலுக்கு பெரும்பாலும் இஞ்சியை பயன்படுத்துவது இல்லை. எனவே இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை உயர்வு பெரிதும் மக்களை பாதிக்கவில்லை. ஆனால் சமையலில் தினமும் அதிக அளவில் சேர்க்கப்படும் தக்காளி கிலோ ரூ.120-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கும் விற்றது.

தக்காளி விலையை கேட்டு வியந்த பலர் அதை குறைவாக வாங்க தொடங்கினர். ஒருசிலர் தக்காளிக்கு பதிலாக சமையலில் புளியை சேர்க்க தொடங்கினர். கடந்த ஜூன் மாதம் உயர தொடங்கிய தக்காளி விலை ஜூலை மாதத்தின் இறுதி வரை ரூ.120-க்கு விற்றது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளாவுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் திண்டுக்கல்லிலும் தக்காளி விலை குறையவில்லை.

பல மடங்கு சரிவு

இதற்கிடையே வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வரத்தொடங்கியது. இதனால் கடந்த ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தக்காளி விலை குறைய தொடங்கியது. மேலும் தக்காளி விலை உயர்வால் தமிழக விவசாயிகளும் தக்காளி சாகுபடியில் இறங்கினர். இதையடுத்து தக்காளி வரத்து அதிகரித்து விலை சரியத்தொடங்கியது.

அதன்படி திண்டுக்கல்லில் கடந்த மாதம் 15-ந்தேதி ரூ.50-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கிலோ ரூ.120-க்கு விற்ற தக்காளி விலை பல மடங்கு சரிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சரக்கு வாகனங்களிலும் தெருத்தெருவாக தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை சரிந்ததால் ஒருசில விவசாயிகள் தோட்டங்களில் தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.


Next Story