குஜிலியம்பாறை அருகே கிணற்றில் மூழ்கி பூசாரி பலி
குஜிலியம்பாறை அருகே கிணற்றில் மூழ்கி பூசாரி பலியானார்.
குஜிலியம்பாறை அருகே உள்ள சுப்பிரமணியகவுண்டனூரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 42). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் ெதாழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் தனது ஊரில் உள்ள கருப்பசாமி கோவிலில் கருப்பையா பூசாரியாகவும் இருந்தார்.
இந்தநிலையில் சுப்பிரமணியகவுண்டனூரில் திருவிழா நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று முன்தினம் அடசல் என்னும் விழா நடைபெற இருந்தது. இதற்காக கருப்பையா ஊர் மந்தையில் உள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாத நிலையில், கிணற்றின் பக்கவாட்டில் நின்றபடி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கிணற்றில் தவறி விழுந்தார். இதில், அவர் நீரில் மூழ்கினார்.
இதற்கிடையே நீண்ட நேரமாகியும் கருப்பையா திரும்பி வராததால் சந்தேகமடைந்த கிராம மக்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது கிராம இளைஞர்கள் கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக குஜிலியம்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, கருப்பையா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.