முதல்-அமைச்சரின் கனவு திட்டத்தில் தவறு நடக்கக்கூடாது


முதல்-அமைச்சரின் கனவு திட்டத்தில் தவறு நடக்கக்கூடாது
x

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதல்அமைச்சரின் கனவு திட்டமாகும். அதில் தவறு நடக்க கூடாது என கதிர்ஆனந்த் எம்.பி. பேசினார்.

வேலூர்

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதல்அமைச்சரின் கனவு திட்டமாகும். அதில் தவறு நடக்க கூடாது என கதிர்ஆனந்த் எம்.பி. பேசினார்.

காலை உணவு வழங்கும் திட்டம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 48 அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா காட்பாடி காந்திநகர் தொடக்கப்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மாணவிகள் இடைநிற்றலை தடுக்கும் செயலாகும். வேலூர் மாவட்டம் கல்வியில் கடைசியில் உள்ளது. அதை மாற்றி முதல் மாவட்டமாக வர அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.

எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி. கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சரின் கனவு திட்டம்

பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முதல்-அமைச்சராக இருந்த காமராஜர் கொண்டு வந்தார். அதன் பின்பு அதனை கலைஞர் சத்தான உணவு திட்டமாக மாற்றினார். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனை உள்ளாட்சி அமைப்பில் உள்ள பிரதிநிதிகள் ஒழுங்காக நடைபெறுகிறதா என தினமும் கண்காணிக்க வேண்டும். முதல்-அமைச்சரின் கனவு திட்டத்தில் தவறு நடக்கக்கூடாது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சுவையான உணவை தினமும் வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு உணவு முக்கியம். அதுவும் சுகாதாரமான உணவு தேவை. அதனை பணியாளர்கள் அன்பாக பரிமாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் பூங்கொடி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சின்ன அல்லாபுரம்

வேலூர் சின்னஅல்லாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன், கதிர்ஆனந்த் எம்.பி. ஆகியோர் குழந்தைகளுக்கு உணவுகளை பரிமாறினர்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. க்கள், இளநிலை பொறியாளர் ஆறுமுகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

விழாவில் கலெக்டர் பேசும்போது, காட்பாடியில் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் சின்னஅல்லாபுரத்தில் நிகழ்ச்சி தொடங்க காலதாதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 1.30 மணி நேரத்துக்கு பின்னர் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. மற்ற பள்ளிகளில் காலை 8.30 மணிக்கு உணவு வழங்கப்பட்டு விட்டது என்றார்.

முன்னதாக உணவுக்காக காத்திருந்த குழந்தைகளுக்கு தேநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை அதிகாரிகள் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story