குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்


குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகூர் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என நாகை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகூர் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என நாகை நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகராட்சி கூட்டம்

நாகை நகராட்சி கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சங்கர், பொறியாளர் விஜய்கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:-

செந்தில்குமார் (துணைதலைவர்):- நாகூர் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மின் மோட்டார் கோளாறு காரணமாக குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்ற முடியாததால், இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. எனவே மோட்டாரை சரி செய்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு முறையாக குடிநீரை ஏற்றி மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாள சாக்கடை திட்டம்

கவுதமன்:-நாகை மகாலட்சுமி நகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை. இதனால் கழிவுநீர் சாலையில் ஓடுவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

ஞானமணி:- காமராஜர் நகர் பகுதியில் சுனாமி குடியிருப்பு பகுதிகளுக்கு இதுவரை ஒப்பனை ஆணை வழங்கப்படவில்லை. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக வரி செலுத்தாத நிலை உள்ளது.

மேலும் காலம் தாழ்த்தினால் மக்கள் மீது அதிக வரி சுமை ஏற்படும். எனது வார்டு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால்களை சரி செய்ய வேண்டும்.

கழிவு நீர் கால்வாய்

தமயந்தி:- கழிவு நீர் கால்வாய்கள் அடைக்கப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் சீராக வழிந்து ஓடுவது கிடையாது. இதனால் குடியிருப்புக்குள் கழிவு நீர் புகுந்து விடும் நிலை ஏற்படுகிறது. எனவே அடைக்கப்பட்டுள்ள கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

ஜோதிலட்சுமி:- நகராட்சி தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு மாதாந்தோறும் தொகுப்பூதியம் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். . கோவில் இடங்களில் வசித்து வரும் மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நகராட்சி நிர்வாகம் அரசிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

சுந்தரீஸ்வரி கணேசன்:- நாகை பாப்பா கோவில் சுடுகாட்டில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். மேலும் சேதமடைந்த சாலைகளை கணக்கிட்டு உடனே சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசினர்.


Next Story