மோசடி பத்திர பதிவை ரத்து செய்யும் நடைமுறை - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


மோசடி பத்திர பதிவை ரத்து செய்யும் நடைமுறை - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Sept 2022 2:47 PM IST (Updated: 28 Sept 2022 2:48 PM IST)
t-max-icont-min-icon

போலி ஆவணத்தை இரத்து செய்யும் அதிகாரம் பதிவுத்துறைக்கு வழங்கும் நடைமுறையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

சென்னை,

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவு அலுவலருக்கு வழங்கும் நடைமுறையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை இரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை இரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையே இருந்து வந்தது. எனவே, பொதுமக்களின் நலனைக் கருதி, முதல் அமைச்சர் வழிகாட்டுதலின்படி பதிவுச்சட்டம், 1908ல் தமிழ்நாட்டிற்கு பொருந்தும் வகையில் இது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்து, போலி, ஆள்மாறாட்டம் போன்ற காரணங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுத்துறையே இரத்து செய்ய அதிகாரம் அளிக்க சட்டப்பேரவையில், 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் 6ம் தேதியன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

திருத்தப்பட்ட இந்தப் பதிவுச் சட்டத்தில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பிரிவு 22-B ஆனது போலி ஆவணங்கள் மற்றும் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆவணங்களின் பதிவினை மறுக்க பதிவு அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், பிரிவு 77-A ஆனது நில அபகரிப்பு செய்து மோசடியாக ஆவணப்பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து மாவட்டப் பதிவாளர்களிடம் புகார் மனு பெறப்பட்டால், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை விசாரித்து பதிவு செய்யப்பட்ட ஆவணம் போலியானது என்று கண்டறியப்பட்டால், அந்த ஆவணத்தினை இரத்து செய்து ஆணையிட மாவட்டப் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணையின்மீது பதிவுத்துறை தலைவரிடம் ஒரு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம்.

மேலும், முறையாக பரிசீலிக்காமல் உள்நோக்கத்துடன் போலி ஆவணத்தைப் பதிவு செய்தால் சம்மந்தப்பட்ட ஆவணதாரர்கள் மற்றும் பதிவு அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து சிறை தண்டனை வழங்கிடவும் சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நில அபகரிப்பு மோசடியாளர்களால் பாதிக்கப்பட்ட, சொத்தின் உண்மையான உரிமையாளர்களுக்கு அச்சொத்தினை மீட்டெடுத்துக் கொடுக்கும் வகையில், மோசடி ஆவணப்பதிவுகளை மாவட்டப் பதிவாளர் இரத்து செய்திட பதிவுச்சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், போலி ஆவணங்கள் பதிவினை அறவே ஒழிக்க சட்டத்தின் துணையோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தின் கீழ் போலி ஆவணப்பதிவினால் பாதிக்கப்பட்ட உண்மையான சொத்து உரிமையாளர்கள் ஐந்து நபர்களுக்கு அவர்களின் சொத்துகள் நில அபகரிப்பாளர்களால் மோசடியாக ஆவணப் பதிவு செய்யப்பட்டதை இரத்து செய்து அதற்கான ஆணைகளை இன்று முதல் அமைச்சர் வழங்கினார்.


Next Story