மாவட்டத்தில்ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியதுபெரும்பாலான வங்கிகளில் கூட்டம் இல்லை


மாவட்டத்தில்ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி தொடங்கியதுபெரும்பாலான வங்கிகளில் கூட்டம் இல்லை
x
தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணி நேற்று தொடங்கியது. இதில் பெரும்பாலான வங்கிகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியே கிடந்தது.

கடலூர்

அச்சடிப்பது நிறுத்தம்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒழித்துக்கட்டியதும் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதும், கடந்த 2019-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டதால், அதுவும் புழக்கத்தில் குறைந்து போனது. இதற்கிடையே சற்றும் எதிர்பாராத வகையில் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி கடந்த 19-ந் தேதி வெளியிட்டது.

இதற்காக ரூ.2000 நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவும், வசதியாகவும் சேவையை வழங்க தேவையான ஏற்பாடுகளை வங்கிகள் மும்முரமாக செய்து வந்தன. மேலும் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதையும், வெளியில் மக்களை காக்க வைக்கக்கூடாது என்பதிலும் வங்கிகள் கவனம் செலுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

4 மாதங்கள் அவகாசம்

இந்தநிலையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி நேற்று முதல் வங்கிகளில் ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறும் பணி தொடங்கியது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் ரூ.2000 நோட்டுகள் நேற்று முதல் திரும்ப பெறப்பட்டது. ஆனால் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொள்ள இன்னும் 4 மாதங்கள் கால அவகாசம் உள்ளதால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பெரும்பாலான வங்கிகளில் மக்கள் கூட்டமே இல்லை. வழக்கமான வங்கி பண பரிவர்த்தனைகள் மட்டுமே நடந்தது. கடலூரில் உள்ள சில வங்கிகளில் மட்டும் பொதுமக்கள் ஒருசிலர் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.2000 நோட்டுகளை வரிசையில் நின்று மாற்றி சென்றனர். ரூ.2000 நோட்டுகளை மாற்றும் பணியின் தொடக்க நாளான நேற்று வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பெரும்பாலான வங்கிகள் வெறிச்சோடியே காணப்பட்டன.

செல்லாத நோட்டுகள் இல்லை

இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. அவை செல்லாத நோட்டு என அறிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த முறை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால், அதனை மக்கள் மாற்றுவதற்கு சிரமப்பட்டனா. தற்போது அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. 4 மாதங்கள் கால அவகாசம் இருப்பதால், முதல் நாளான இன்று (அதாவது நேற்று) வங்கிகளுக்கு ரூ.2000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் குறைவாகவே வந்தனர். அவர்களும் ரூ.2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்ததும், அவர்களது வங்கி கணக்கில் அந்த தொகை வரவு வைக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் எளிதில் மாற்றிக் கொண்டனர் என்றார்.


Next Story