மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கியது
மகளிர் உரிமை தொகை
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் ஒன்றான குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.
அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை பணியாளர்கள் விண்ணப்பம் மற்றும் டோக்கன்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரராக்கியம், மணவாசி ஆகிய பகுதிகளில் விண்ணப்பங்களை ரேஷன் கடை விற்பனையாளர்கள் வழங்குவதை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
583 ரேஷன் கடை
கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெறுவதற்காக மொத்தம் உள்ள 583 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 871 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் முதற்கட்டமாக 390 ரேஷன் கடைகளில் உள்ள 2 லட்சத்து 29 ஆயிரத்து 58 குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் கடை விற்பனையாளர்கள் கொண்டு குடும்பத்தலைவிகளுக்கு வீடுகளில் நேரடியாக வழங்கப்படுகிறது.
இப்பணிக்கான விண்ணப்பங்கள் வருகிற 23-ந்தேதி வரை வழங்கப்பட உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு விண்ணப்பங்களுடன் முகாம்களுக்கு வரும் குடும்பத் தலைவிகள் அவர்களுக்கு ஒதுக்கிய நாள் மற்றும் நேரத்திற்குள் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, துணை பதிவாளர் (கரூர் சரகம்) அபிராமி, தனித்துணை கலெக்டர் சைபுதீன், ரேஷன் கடை பணியாளர்கள் உடனிருந்தனர்.