பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டன. மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் இருமாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தக்கலை,
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் புறப்பட்டன. மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் இருமாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
நவராத்திரி விழா
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி திருவனந்தபுரம் செல்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடைந்தது.
உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி
குமரி மாவட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி நேற்று காலையில் பத்மநாபபுரத்தில் நடந்தது. ஊர்வலத்தின் முன்பு மன்னரின் உடைவாளை எடுத்து செல்வது வழக்கம். இதையொட்டி உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நேற்று காலை 8 மணியளவில் அரண்மனையில் நடந்தது.
பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னரின் உடைவாளை அரண்மனை அதிகாரி அஜித்குமார் எடுத்து கேரள தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தார். அவர் அந்த வாளை பெற்றுக்கொண்டு தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கொடுத்தார். அவரிடம் இருந்து தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஞானசேகர், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் வாளை பெற்றுக்கொண்டனர். பின்னர் அந்த வாளை குமாரகோவில் மேலாளர் சுதர்சன குமாரிடம் ஒப்படைத்தனர். அவர் வாளை ஏந்தியபடி முன்செல்ல ஊர்வலம் புறப்பட தயாரானது.
யானை மீது சரஸ்வதி அம்மன் சிலை
தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை சிறப்பு பூஜைகளுக்கு பின்பு எடுத்து வரப்பட்டு நெற்றிப்பட்டம் சூட்டிய யானை மீது முத்துக்குடையின் கீழ் வைக்கப்பட்டது. பின்னர் பூ பல்லக்குகளில் வேளிமலை முருகபெருமான், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலைகள் வைக்கப்பட்டன.
தொடர்ந்து மேளதாளம் முழங்க, பெண்கள் குலவையிட, பக்திகோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் புடைசூழ ஊர்வலம் புறப்பட்டது.
உடைவாள் முன் செல்ல யானை மீது சரஸ்வதி அம்மனும், பூ பல்லக்குகளில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய சாமி சிலைகளும் ஊர்வலமாக புறப்பட்டு சென்றன.
கலந்து கொண்டவர்கள்
இந்தநிகழ்ச்சியில் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டி, திருவிதாங்கூர் தேவசம் தலைவர் அனந்தகோபன், பாறசாலை எம்.எல்.ஏ.ஹரீந்திரன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை, கல்குளம் தாசில்தார் வினோத், நெல்லை மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையர் கவிதா, பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், மத்திய அரசு வக்கீல் வேலுதாஸ், நகராட்சி ஆணையர் லெனின், கவுன்சிலர்கள் நாகராஜன், பிரியதர்சினி, செந்தில்குமார், ஷீபா, அரண்மனை ஒப்பந்ததாரர் பி.எஸ்.ராஜன், ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட பொறுப்பாளர் ஜோதீந்திரன், பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் குமரி ப.ரமேஷ், ஒன்றிய செயலாளர் ஸ்ரீபத்மநாபன், பிற்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் குமாரதாஸ், காங்கிரஸ் நகர தலைவர் ஹனுகுமார், தி.மு.க. நகர செயலாளர் சுபிகான் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்
வழிநெடுகிலும் பக்தர்கள் உற்சாகம்
ஊர்வலம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்டு கொல்லகுடிமுக்கு, மேட்டுக்கடை வழியாக நேற்று மதியம் கேரளபுரம் மகாதேவர் கோவிலை சென்றடைந்தது. அங்கு மதியம் ஓய்வு எடுத்த பின்பு மாலையில் மீண்டும் புறப்பட்டு அழகியமண்டபம், முளகுமூடு, சாமியார்மடம், மார்த்தாண்டம் வழியாக சென்றது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நவராத்திரி சாமி சிலைகள் ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகமாக சாலையின் இரண்டு பக்கங்களிலும் திரண்டு நின்று மலர் தூவியும், தீபாராதனை காட்டியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
ஊர்வலம் நேற்றிரவு குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது. அங்கு சாமி சிலைகள் தங்கவைக்கப்பட்டன.
தமிழக-கேரள எல்லையில் வரவேற்பு
இன்று (சனிக்கிழமை) காலையில் ஊர்வலம் குழித்துறையில் இருந்து புறப்பட்டு தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையை சென்றடைகிறது. அங்கு சாமி சிலைகளுக்கு ேகரள போலீசார் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இன்று நெய்யாற்றின்கரையில் தங்கும் சாமிசிலைகள் ஊர்வலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவனந்தபுரம் சென்றடையும்.