செல்போனில் ஆபாசமாக பேராசிரியர் பேசியதாக-பரமக்குடி அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் போராட்டம்
செல்போனில் ஆபாசமாக பேசிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
பரமக்குடி,
செல்போனில் ஆபாசமாக பேசிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
உள்ளிருப்பு போராட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் சத்தியசேகரன்(வயது 47) பி.ஏ. வரலாற்றுத்துறை 2-ம் ஆண்டு மாணவி ஒருவரிடம் செல்போனில் ஆபாசமாகவும், மற்றொரு மாணவியின் செயல்கள் குறித்தும் பேசியதாக தெரிகிறது. அதை அந்த மாணவி செல்போனில் பதிவு செய்துள்ளார்.
தற்போது அந்த பேராசிரியர் பேசிய அந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதைத்தொடர்ந்து நேற்று காலை அந்த பேராசிரியர் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தார். அதை அறிந்த கல்லூரி மாணவ- மாணவிகள் அந்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் முன்பு தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் விசாரணை
இது பற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் மேகலா, சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பேரில் மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனர்.
பின்பு திடீரென மீண்டும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. அதன்பின்னர் அந்த மாணவிகளின் பெற்றோர் வந்து கல்லூரி முதல்வர் மேகலாவிடம் புகார் மனு அளித்தனர். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் மேகலா கூறினார். அதை தொடர்ந்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
விசாரணை குழு
இந்த சம்பவத்தையொட்டி இன்று(புதன்கிழமை) முதல் பரமக்குடி அரசு கலைக்கல்லூரிக்கு தேதி குறிப்பிடாமல் விடுமுறை விடப்பட்டு உள்ளது. பேராசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பேராசிரியர் சத்தியசேகரன் குறித்த புகாரின் பேரில் விசாரணை செய்ய 5 பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வருகிற 17-ந்தேதிக்குள் விசாரணை அறிக்கையை அளிக்குமாறு கல்லூரி முதல்வர் மேகலா உத்தரவிட்டு உள்ளார். மேலும் அந்த பேராசிரியர் பேசியதாக சில ஆடியோக்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையே பரமக்குடி அனைத்து மகளிர் போலீசார் பேராசிரியர் சத்தியசேகரன் மீது 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.