"திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்"-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு


திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
x
தினத்தந்தி 27 May 2023 12:15 AM IST (Updated: 27 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

தூத்துக்குடி

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

ரூ.56 கோடியில் முடிவுற்ற பணிகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.56 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் மற்றும் 15-வது நிதிக் குழுத் திட்டங்களின் கீழ் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா நேற்று புதிய பஸ்நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் நேரு திறந்து வைத்தார்

சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு ரூ.56 கோடியே 65 லட்சம் மதிப்பிலான, பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடம், டோபிகானா, 8 பூங்காக்கள், வளமீட்பு மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றை திறந்து வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், புதிதாக தொடங்கப்படவுள்ள முக்கியமான திட்டப்பணிகள் குறித்தும், மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் மூலமாக துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் ரூ.899.95 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சில திட்டங்கள் நடந்து முடியும் நிலையில் இருக்கிறது.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன் வைத்துள்ளார். அதேபோன்று கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோரும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், புதிதாக போடப்படும் சாலைகள் மண் சாலையின்றி முழுமையாக தார் சாலையாக அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள். அனைவரது கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.

தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பழைய பஸ்நிலையம், வணிக வளாகம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் முடிக்கப்படும். முதல்-அமைச்சர் நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டப்பணிகளுக்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி. பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை, குடிநீர் வசதிகள் செய்து தருவதற்கான உறுதியை அமைச்சர் அளித்திருக்கிறார். தமிழக முதல்-அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரிடம், 20 நாட்களில் முடிக்க வேண்டிய பணிகளை 2 நாளில் முடித்து தந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் எந்த ஒரு வேலையையும் ஒப்படைப்பார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களை விரைந்து முடித்து தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சிகள் இயக்குநர் கிரன் குராலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மாநகராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டம்

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், புதிதாக தொடங்கப்படவுள்ள முக்கியமான திட்டப்பணிகள் குறித்தும், மாவட்டத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.


Next Story