கடலூரில் பரபரப்பு செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டம்
கடலூரில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் வெளிசெம்மண்டலம் கங்கை வீதி பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவரது வீட்டின் மாடியில், தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு சென்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைக்கப்படும் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறிந்த கடலூர் புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால், அதில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால் தங்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படக்கூடும் என்று தெரிவித்தனர்.
அதற்கு போலீசார், செல்போன் கோபுரம் அமைக்க உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், பணியை தடுத்து நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறி, பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.