கால்நடை மருத்துவமனை கட்ட பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு
தொரப்பாடியில் கால்நடை மருத்துவமனை கட்ட பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கால்நடை மருத்துவமனை
வேலூர் தொரப்பாடி ஜெயில் அருகே ராம்சேட்நகரில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ராம்சேட்நகர் நுழைவு வாயில் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்நடை மருத்துவமனை கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்றுமுன்தினம் காலை ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, மருத்துவமனை கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கால்நடை மருத்துவமனை கட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், புறநகர் பகுதியில் கட்ட வலியுறுத்தியும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இந்தநிலையில் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு மருத்துவமனை கட்டுவதற்கு நிலஅளவீடு செய்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் செந்தில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு பணியை தடுக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தனர். அதையும் மீறி அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்கள் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் இதுதொடர்பாக புகார் செய்ய முடிவு செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.