கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கீரணிப்பட்டி கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்பை கண்டித்து கலெக்டா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
முற்றுகை
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிலையில், திருமயம் அருகே கீரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தங்கள் கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர்ப்பிடிப்பு பகுதியில் தனிநபர் ஆக்கிரமித்து பட்டா பெற்றிருப்பதாகவும், அந்த பட்டாவை ரத்து செய்யக்கோரியும், ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க குறிப்பிட்ட நபர்களை போலீசார் அனுமதித்தனர்.
துணிப்பை
இதேபோல பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 463 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை பெற்ற கலெக்டர் கவிதாராமு அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேரிடர் மேலாண்மை முகமையின் சார்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்க்கும் பொருட்டும், புயல், வறட்சி, பூகம்பம், தீ, வெள்ளம், இடி மற்றும் மின்னல் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துணிப் பைகளை பொதுமக்களுக்கு கலெக்டர் கவிதாராமு வழங்கி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 86 வாரச்சந்தைகள் மூலமாக தலா 500 பொதுமக்களுக்கு முதல்நிலை மீட்பாளர்கள் மூலமாகவும், கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தரும் 1,000 பொதுமக்களுக்கும் என மொத்தம் 44 ஆயிரம் துணிப் பைகள் வழங்கப்படவுள்ளது.