நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
தென்காசியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
தென்காசியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டம்
சுரண்டை அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தென்காசி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "தங்களது பகுதியில் எங்கள் சமுதாயத்திற்கு சொந்தமான அழகுமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த கோவில் நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் உள்ளது. ஆனால் இந்த கோவில் நெடுஞ்சாலைத்துறையில் இருப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் கொடுத்துள்ளனர். காலம் காலமாக தாங்கள் வழிபட்டு வரும் இடத்தை அகற்றக்கூடாது" என்றனர்.
பேச்சுவார்த்தை
நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், கோவிலை தற்போதைக்கு அகற்ற மாட்டோம் என அதிகாரிகள் கூறினர்.
ஆனால் இதுதொடர்பாக எழுதி தர வேண்டும் பொதுமக்கள் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் மறுக்கவே போராட்டம் தொடர்ந்தது. மாலை 6 மணிக்கு அதிகாரிகள் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது மற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கோவில் அகற்றப்பட மாட்டாது. ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து பொதுமக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 6 மணி வரை 3½ மணி நேரம் நடைபெற்றது.
முன்னதாக அவர்கள் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு கொடுத்தனர்.