கிராம சபை கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை


கிராம சபை கூட்டத்துக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
x

முற்றுகை

ஈரோடு

சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சியில் ெரயில்வே சரக்கு சேமிப்பு முனையம் அமைப்பது குறித்து விரிவான விளக்கம் அளிக்கவில்லை எனக்கூறி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ரெயில்வே சரக்கு முனையம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈங்கூர் - விஜயமங்கலம் ெரயில் நிலையங்களுக்கு இடையே துலுக்கம்பாளையம் பகுதியில் ரெயில்வே துறையின் "கதி சக்தி மல்டி மாடல் கார்கோ டெர்மினல் திட்டத்தின்" கீழ் தனியார் சரக்கு முனையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்துக்காக பனியம்பள்ளி மற்றும் வாய்ப்பாடி ஊராட்சியில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் நிலம் எடுப்பு செய்ய அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

எதிர்ப்பு

ஆனால் அங்கு சரக்கு முனையம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் ஆகஸ்ட் 15-ந் தேதி மற்றும் அக்டோபர் 2-ந் தேதிகளில் பனியம்பள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று பனியம்பள்ளி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, சென்னிமலை கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்து அனைவரும் கிளம்பும்போது அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் என ஏராளமானோர் அங்கு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், 'ெரயில்வே துறைக்கு நிலங்களை எடுக்க அளவீடு செய்யக்கூடாது என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது குறித்து ஊராட்சி நிர்வாகமும், வருவாய் துறையினரும் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான விளக்கம் அளித்தால் தான் கிராமசபை கூட்டத்திற்கு வந்துள்ள அதிகாரிகளை வெளியே அனுப்புவோம்,' என்றனர்.

பேச்சுவார்த்தை

இதைத்தொடா்ந்து பெருந்துறை துணை தாசில்தார் செல்வகுமார், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து காலதாமதம் இன்றி பொதுமக்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்படும்,' என உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Next Story