நடுவீரப்பட்டில் இரு சமூகத்தினர் மோதல் எதிரொலி: விசாரணைக்கு 8 பேரை அழைத்து சென்றதால் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


நடுவீரப்பட்டில் இரு சமூகத்தினர் மோதல் எதிரொலி:    விசாரணைக்கு 8 பேரை அழைத்து சென்றதால் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x

நடுவீரப்பட்டில் இரு சமூகத்தினர் மோதல் எதிரொலியாக விசாரணைக்கு 8 பேரை போலீசார் அழைத்து சென்றதால், போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

இரு சமூகத்தினர் மோதல்

நடுவீரப்பட்டு காலனி அருகே அய்யனார் கோவில் உள்ளது. நேற்று சஞ்சீவிராயன் கோவில் பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள், ஊரணி பொங்கல் விழாவை முடித்துவிட்டு செல்லும்போது, அவர்களுக்கும் நடுவீரப்பட்டு காலனி மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் காயமடைந்த ஊர் பொதுமக்கள் மற்றும் காலனியை சேர்ந்த 8 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சஞ்சீவிராயன் கோவில் பகுதியை சேர்ந்த 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

முற்றுகை

மேலும் நேற்று நள்ளிரவு போலீசார் சஞ்சீவிராயன் கோவில் பகுதியில் இருந்த 8 பேரை திடீரென பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி அறிந்த பா.ம.க. மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமையில் பொதுமக்கள், திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

நடவடிக்கை

அப்போது பொதுமக்கள், மோதல் சம்பவத்தில் இருதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் போலீசார் ஒரு தரப்பினர் மீது வழக்கு பதிந்து, சம்பந்தமில்லாத நபர்களை போலீஸ் நிலையத்திற்கு நள்ளிரவில் அழைத்துச் சென்றுள்ளனர். அதனால் நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும்.

மேலும் தற்போது பிடித்து வைத்துள்ள நபர்களை விடுவிக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், நீங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவி்ட்டு கலைந்து சென்றனர்.

7 பேர் கைது

இதற்கிடையே விசாரணைக்கு அழைத்து சென்றவர்களில் 2 பேரை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சஞ்சீவிராயன் கோவில் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு காலனியை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் சஞ்சீவிராயன் கோவில் பகுதியை சேர்ந்த விஷ்ணு, திருமூர்த்தி, எழில்செல்வன், சந்துரு, விக்னேஷ், சூர்யா, பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்த ரவிக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story