தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x

ஆரணியில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுமனை பட்டா

ஆரணியை அடுத்த மட்டத்தாரி காலனி பகுதியில் போளூர் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தின் சார்பாக கடந்த 1997-ம் ஆண்டு வீடு இல்லாத 67 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் 25 ஆண்டுகள் ஆகியும் ஆதிதிராவிடர் பகுதியில் அரசால் வீட்டுமனை பெற்றவர்கள் இதுவரை வீடு கட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் அந்த வீட்டு மனையை அரசே எடுத்துக் கொள்ளும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு நோட்டீஸ் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் முன்பாக ஒட்டப்பட்டது.

தாலுகா அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த ஆதிதிராவிட மக்கள் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆரணி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை அளந்து கொடுக்க அரசுக்கு பணம் செலுத்தியும் இதுவரை அளந்து கொடுக்கவில்லை.

இதனால் தான் நாங்கள் வீடு கட்ட வில்லை. ஆகவே இதனை முறையாக அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

திருவண்ணாமலையில் அமைச்சர், கலெக்டருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டதால் தாசில்தார் அங்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து மண்டல துணை தாசில்தார் ஸ்ரீதேவி போராட்டம் நடத்தியவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்று கொண்டு, உடனடியாக இடத்தை அளந்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story