சிறை கைதிகள் வாசிக்க பொதுமக்கள் புத்தகம் வழங்கலாம்


சிறை கைதிகள் வாசிக்க பொதுமக்கள் புத்தகம் வழங்கலாம்
x

சிறை கைதிகள் வாசிக்க பொதுமக்கள் புத்தகங்களை வழங்கலாம் என்று சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதான 200-க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். இந்த கைதிகள் சிறையில் இருப்பதால் மனஅழுத்தம் அதிகமாகி தவறான முடிவுகளை எடுத்து மீண்டும் தவறு செய்யும் வாய்ப்பு உள்ளது. எனவே சிறை கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் புத்தகம் வாசிக்க வைக்கப்பட இருக்கிறது. இதையொட்டி மாவட்ட சிறையில் கைதிகள் படிக்க வசதியாக புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.

இதில் பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி மாவட்ட சிறையில் புத்தக தான பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே சிறை கைதிகள் படிப்பதற்கு புத்தகம் வழங்க விரும்பும் பொதுமக்கள், சிறையில் இருக்கும் புத்தக தான பெட்டியில் புத்தகங்களை போடலாம். அந்த புத்தகங்கள் சிறை கைதிகள் படிப்பதற்கு வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்ட சிறை மட்டுமின்றி கிளை சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கும் அந்த புத்தகங்கள் வழங்கப்படும் என்று சிறை சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார். இதற்கிடையே நேற்றைய தினம் குழந்தைகள் உள்பட பலர் புத்தகங்களை வழங்கினர்.

இதேபோல் வேடசந்தூர் கிளைச்சிறையில் கைதிகள் வாசிக்க புத்தகங்களை தானமாக வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு வேடசந்தூர் கிளைச்சிறை சூப்பிரண்டு ரமேஷ் தலைமை தாங்கினார். அப்போது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சிலர் புத்தகங்களை வழங்கினர். இதேபோல் பொதுமக்கள் புத்தகங்களை தானமாக வழங்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story