மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்த பொதுமக்கள்


மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை மடக்கி பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அருமனை அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

அருமனை,

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை அருமனை அருகே பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதையடுத்து லாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கழிவு பொருட்கள்

குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளுக்கு கேரளாவில் இருந்து உணவுப் பொருள்கள் ஏற்றி வருவதாக பல்வேறு விதமான கழிவுகள் வாகனங்களில் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் பன்றிகளுக்கு உணவு என்ற போர்வையில் மருத்துவ கழிவுகள் மற்றும் ஓட்டல்கள் கழிவுகள் கேரளாவில் இருந்து கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் இந்த பகுதிகளில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணியளவில் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றிய ஒரு லாரி அருமனை குழிச்சல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனால், அந்த பகுதியில் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதை பார்த்த பொதுமக்கள் லாரியை பார்த்து சத்தம் போட்டனர்.

மடக்கி பிடித்தனர்

இதைபார்த்து அச்சம் அடைந்த லாரி டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றார். உடனே, பொதுமக்களில் சிலர் மோட்டார் சைக்கிளில் லாரியை துரத்தி சென்றனர்.

அருமனை அருகே படப்பச்சை என்ற பகுதியில் சென்றதும் லாரியை மடக்கி பிடித்தனர். உடனே டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். இதுகுறித்து பொதுமக்கள் அருமனை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து லாரியை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்து அருகாமையில் கொண்டு வந்தனர். அப்போது லாரியில் இருந்து பயங்க துர்நாற்றம் வீசியதால் அதை மீண்டும் கேரளாவுக்கு அனுப்ப வேண்டும் என கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து லாரியின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரணை நடத்திய போது அதை உரிமை கொண்டாட யாரும் வரவில்லை.

பரபரப்பு

தொடர்ந்து லாரியில் இருந்த கழிவுகளை அகற்ற போலீசார் சார்பில் பல முயற்சிகள் எடுத்த பின்பும் மாலை வரை முடிவு எட்டப்படவில்லை. இதனால் கழிவு பொருட்களுடன் லாரி பேரூராட்சி அலுவலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story