வழிவிட மறுத்தவரின் வீட்டை சுற்றி பள்ளம் தோண்டிய பொதுமக்கள்
நாட்டறம்பள்ளி அருகே பொது வழி பாதை அமைக்க இடம் தர மறுத்தவரின் வீட்டை சுற்றி பொதுமக்கள் பள்ளம் தோண்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளம் தோண்டினர்
நாட்டறம்பள்ளி தாலுகா அம்மணாங்கோயில் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட அடியத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாமுடி. இவரது மகன் மகேந்திரன், பெருமாள் மகன் ராஜா. இவர்களின் பட்டா நிலத்திற்கு நடுவில் 10 அடி அளவில் செல்லும் சாலையை சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் 75 குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது நிலத்தின் உரிமையாளர்கல் தங்கள் நிலத்தின் வழியாக செல்ல வழி விடமாட்டோம் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இரு குடும்பத்தினரும் அந்த வழியை பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் வீட்டின் முன்புறத்திலும், பின்புறத்திலும் பள்ளம் தோண்டினர்.
பேச்சுவார்த்தை
இதனால் மகேந்திரன் உள்ளிட்ட இரண்டு குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. இது குறித்து மேற்கண்ட 2 குடும்பத்தினர் நேற்று நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாரிடம் புகார் அளித்தனர்.
அதன்பேரில் தாசில்தார் தலைமையில் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அடுத்த வாரம் உதவி கலெக்டர் தலைமையில் இப்பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தை நடப்பட்டும் என்று கூறி, பொதுமக்களால் தோண்டப்பட்ட பள்ளத்தை மண் கொட்டி சரிசெய்தனர்.
மண்டல துணை தாசில்தார் பூபதி, வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சர்தார் உள்பட பலர் உடன் இருந்தனர்.