தொடர் செல்போன் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் கலக்கம்


தொடர் செல்போன் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் கலக்கம்
x
தினத்தந்தி 8 Oct 2022 12:15 AM IST (Updated: 8 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தொடர் செல்போன் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் தொடர் செல்போன் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

செல்போன் பயன்பாடு அதிகரிப்பு

2010-ம் ஆண்டுக்கு முன்னர் செல்போன் பயன்பாடு என்பது வசதியானவர்கள் கையில் மட்டும் இருந்த நிலையில், தற்போது பாமரர்களின் கையிலும் தவழும் சாதனமாக செல்போன் மாறிவிட்டது. முதலில் சாதாரண செல்போன்கள் புழக்கம் இருந்த நிலையில் தற்போது குறிப்பாக ஆண்ட்ராய்டு செல்போன்கள் புழக்கம் அதிகரித்துவிட்டது. இதற்கு முன்னர் ஊரில் ஒரு சிலர் செல்போன் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது ஒருவரே 2 செல்போன்கள் பயன்படுத்தும் அளவுக்கு செல்போன்களின் தேவை அதிக விஷயம் ஆகிவிட்டது.

அதனால் ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆண்ட்ராய்டு செல்போன்கள் அதிகம் விற்பனையாகின்றன. செல்போன்கள் விலை அதிகரித்து இருப்பதினால் செல்போன்கள் திருட்டு சம்பவங்களும் தற்போது அதிகமாக நடந்து வருகின்றன. இது குறித்து நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுவதை பார்க்கலாம்:-

லாரன்ஸ், ஊட்டி:-

வேலை காரணமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்யும்போது, சுப நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, திருவிழாக்கள் அல்லது பண்டிகைகளுக்கு செல்லும்போது செல்போன்கள் திருடு போகின்றன. சில நேரங்களில் தொலைந்து போகின்றன. செல்போன்கள் நேரடியாக திருடு போவது ஒரு பக்கம் என்றாலும், தொலைந்து போய்விட்டால் அதை சிலர் எடுத்து சென்று விடுகின்றனர். அவ்வாறு எடுக்கப்படும் செல்போன்கள் உடனடியாக சுவிட்ச் ஆப் செய்யப்படுகிறது. இதனால் செல்போன்களில் பறிக்கொடுத்த பொதுமக்கள் கலக்கம் அடைகிறார்கள்.

இதற்கு முன்னர் இவ்வாறு திருடப்படும் செல்போன்களை அவர்களே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக செல்போன் இருப்பிடத்தை அறிய முடியும் என்பதால் செல்போனை திருடுபவர்கள் பயன்படுத்தாமல் கடைகளில் குறைந்த விலைக்கு விற்று விடுகின்றனர். எனவே திருட்டு செல்போன்களை கடைகளில் வாங்க கூடாது. அவ்வாறு வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்கப்படும் செல்போன்கள்

செந்தில்குமார், அரசு வக்கீல், ஊட்டி:- செல்போன் திருட்டு சம்பவங்களை பொறுத்தவரை, மது குடித்து ஒருவர் மயங்கி கிடந்தால் அவரிடம் திருடப்படுகிறது. அதேபோல் திருவிழா உள்ளிட்ட விசேஷங்களுக்கு செல்லும்போது வாகனங்களில் வைக்கப்படும் செல்போன்கள் திருடு போகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சக வக்கீல் ஒருவரின் செல்போன் திருடு போனது. அது குறித்து நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கையில் திருடு போன ஒரு மணி நேரத்தில் ஜி.பி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் மூலம் செல்போனையும் திருடி ஆசாமியையும் கண்டுபிடித்தனர். அந்த அளவுக்கு தொழில்நுட்பம் அதிக அளவில் உள்ளது மகிழ்ச்சி தருகிறது.

அதே சமயத்தில் திருடு போன செல்போன்களை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் உடனடியாக ஒப்படைக்காமல் மொத்தமாக வைத்திருந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கின்றனர். இந்த இடைப்பட்ட சமயத்தில் திருடு போன உரிமையாளர்கள் விரக்தி அடைந்து புது செல்போனே வாங்கி விடுகின்றனர். எனவே மீட்கப்படும் செல்போன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்மைகளும், தீமைகளும்

கூடலூர் முருகன்:- அறிவியல் வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பக் கருவிகள் நேர்மறையான போக்குகளையும் எதிர்மறையான செயல்பாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆயுதம் என்பது அதை வைத்திருக்க கூடிய ஆளுமையின் குணநலத்தையும் மனநிலையையும் பொறுத்து நன்மையையும் தீமையையும் விளைவிக்கக் கூடியதாக மாறி விடுகிறது. அண்மை காலமாக கல்வியை போதிக்கக்கூடிய ஆசிரியர்களும் இந்த தவறான வழிநடத்தலுக்கு காரணமாக அமைந்திருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தரத்தக்க செய்திகளும் தகவல்களும் வந்து கொண்டிருக்கிறது. செல்போன் பயன்பாடுகள் உள்ள அலைபேசி விற்பனை அண்மைக்காலமாக கொடி கட்டி பறக்கிறது. நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக புதிய வணிக நிறுவனங்கள் புதிய பொலிவுகளுடன் பல்வேறு நிறுவன தயாரிப்புகளை தங்கள் அங்காடிகளில் விற்பனைக்கு காட்சிப்படுத்தி அதிகமான விளம்பரங்களை செய்து விற்பனை செய்து வருகின்றார்கள். அதிகபட்சமாக ஒரு லட்ச ரூபாய்க்குக்கூட செல்ேபான் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிகிறது. நன்மைகளையும் தீமைகளையும் ஒருங்கே கொண்ட அலைபேசிகள் விலைமதிப்புள்ளதாகவும் பயன்பாடு மிக்கதாகவும் இருப்பதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் செல்போன்களை திருடி விற்பனை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. திருடர்கள் இருசக்கர, நான்கு சக்கர ஊர்திகள் திருடர்கள் போல ஒரு கும்பலாகவே செயல்பட்டு வருவதை அண்மை கால செய்தி ஊடகங்கள் வாயிலாகவும் நமது நேரடி பட்டறிவுகள் மூலமும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தொலைபேசி விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு கருவிகளை பொருத்தி அவற்றை அந்த அங்காடிகளின் உரிமையாளர்கள் நேரடியாக கண்காணிக்கக் கூடிய வகையிலும் காவல்துறைக்கு இணைப்புக் கொடுக்கும் வகையிலும் கருவிகளை பயன்படுத்த வேண்டும். பெற்றோர்கள் இளைஞர்கள் பாதை மாறி செல்லாதபடி அவர்களை நல்வழிபடுத்துவதற்கான விளையாட்டு போன்ற மாற்று சிந்தனை வழியில் செயல்பட வளர்க்க வேண்டும். இளைஞர்கள் இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து மதிப்புடன் வாழ, தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் தங்களின் எதிர்கால வாழ்க்கையை நல்ல வகையில் அமைத்துக் கொள்ள நேர்மையான வழியில் நடைபோட வேண்டும்.

ஐ.எம்.இ.ஐ எண்

கோத்தகிரியைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஆடில் அக்பர்:

கோத்தகிரி பகுதியில் பிக் பாக்கெட் தொல்லை பெரிதும் குறைவாகவே உள்ளது. ஆனால் செல் போன்கள் திருட்டு என்பது சற்று அதிகமாக உள்ளது. பொதுமக்களிடையே தற்போது செல்போன்கள் பயன்பாடு அத்தியாவசிய தேவை என்பது போய் ஆடம்பரத் தேவையாக மாறிவிட்டது. விலை உயர்ந்த போன்களைப் பயன்படுத்துவது தான் கவுரவம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். விலை உயர்ந்த செல்போன்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக செல்போன் திருட வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கு ஏற்பட்டு வருவதால், செல்போன் திருட்டுக்கள் வெகுவாக அதிகரித்து விட்டன. கடைகள், வணிக நிறுவனங்கள், திருவிழாக்கள், இறப்பு வீடுகளிலும் கூட செல்போன்கள் திருட்டு போவது வழக்கமாகி வருகிறது. பெரும்பாலும் பஸ்களில் பயணிக்கும் போது செல்போன்கள் திருடப்பட்டு வருகின்றன. சமீப காலமாக காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு மூலம் காணாமல் போன செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணைப் பயன்படுத்தி செல்போன்களைக் கண்டுபிடித்து உரியவர்களிடம் சேர்க்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

மன உளைச்சல்

குன்னூர் விஜயகாந்த் முத்துகிருஷ்ணன்:-

தற்போதுள்ள நவீன உலகத்தில் செல்போன் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. செல்போன் பல அறிவியல் தொடர்பான செய்திகள், உலக செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இது மட்டுமின்றி செல்போன் மூலமாக சிரமமின்றி வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி உள்ளது. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த செல்போன் தற்போது ஒவ்வொருக்கும் இன்றியமையாததாக உள்ளது. செல்போன் திருட்டு தற்போது நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. செல்போன் திருட்டு என்பது ஒருவரின் வாழ்க்கையையே புரட்டி போட்டு அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிவிடும். மேலும் செல்போன் திருடுபவர்கள் தீவிரவாத செயல்களுக்கும் பயன்படுத்தி விடுவார்கள்.

செல்போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். செல்போன் திருட்டு போய்விட்டால் உடனடியாக காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டும். அப்போதுதான் திருட்டு போன செல்போனை கண்டு பிடிக்க வசதியாக இருக்கும். இதற்கு காவல்துறையினர் விழிப்புணர்வு முகாமை நடத்த வேண்டும். பிக்பாக்கெட் என்று சொல்ல கூடிய ஜேப்படி பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் நடக்கிறது. மேலும் இருட்டான பகுதியில் இந்த திருட்டு நடக்கிறது. எனவே அதிகளவு கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல், இருட்டான இடங்களில் விளக்குகளை பொருத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுமா?-சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு

நீலகிரி பாரம்பரிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. தற்போது 2-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. அதனால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் தொடர் விடுமுறை மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆசாமிகள் செல்போன் திருட்டு மற்றும் ஜேப்படிகளில் ஈடுபட அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. இதில் சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகளிடம் ஒரு சில நேரங்களில் செல்போன் திருடப்படுகிறது. அவர்கள் புகார் கொடுத்தால் கால தாமதமாகும், சொந்த ஊர் செல்ல முடியாது. மேலும் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு செல்ல முடியாது என்பதால் புகார் தராமல் செல்கின்றனர். எனவே சுற்றுலாத்தலங்களில் போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும், அரசு பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது.


906 வழக்குகள் பதிவு

நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை சைபர் கிரைம் வழக்குகள் விரைந்து துப்பு துலக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். நீலகிரியில் கடந்த மே மாதத்தில் இருந்து தற்போது வரை செல்போன் திருட்டு சம்பந்தமாக 906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 171 செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட செல்போன்களின் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் ஆகும்.

செல்போன்கள் திருடு போனாலும் தொலைந்து போனாலும் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்காமல் தாமதமாக புகார் அளிப்பதால் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த விஷயத்தில் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் புகார் அளிக்க வேண்டும். அதே சமயத்தில் திருட்டு செல்போன்களை வாங்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


Next Story