காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x

சொரத்தூர் ஊராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி

சொரத்தூர் ஊராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

குடி தண்ணீர்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். முகாமில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார்.

துறையூர் சொரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா நெப்போலியன் மற்றும் பொது மக்கள் கொடுத்த மனுவில், சொரத்தூர் ஊராட்சியில் 5 கிராமங்கள் உள்ளன. இங்கு 4,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆழ்குழாய் கிணறு-2, திறந்தவெளி கிணறு-13 உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் உப்புநீராக இருப்பதால் பொதுமக்களுக்கு குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த முடியவில்லை, இப்பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இயங்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் கிராம குடிநீர் திட்டத்தில் இருந்து தற்போது வரை குடிநீர் வழங்க வில்லை. எனவே மேற்கண்ட பகுதிக்கு காவிரி குடிநீர் நிரந்தரமாக தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இலவச பட்டா

அந்தநல்லூர் ஊராட்சி மேல குழுமணி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் தாலுகா குழுமணி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட மேல குழுமணி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கின்ற வீட்டிற்கு குழுமணி ஊராட்சியில் வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி முறையாக செலுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை விண்ணப்பித்துள்ளோம். எனவே உரிய விசாரணை செய்து இலவச பட்டா வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டு இருந்தனர்

ஜல்லிக்கட்டு

லால்குடி வடுகர்பேட்டை பொதுமக்கள் கொடுத்த மனுவில், லால்குடி தாலுகா வடுகர்பேட்டை கிராமத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்னர் திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 33 கிராமங்கள் அரசிதழில் இடம் பெற்றிருந்தன. அதில் 11 கிராமங்கள் அரசிதழில் சேர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது வரை வடுகர்பேட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வில்லை. எனவே இந்த ஆண்டு எங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறியிருந்தனர்.

விசாரணை நடத்த...

புதிய தமிழகம் கட்சி மற்றும் பா.ஜ.க. சார்பில் கொடுத்த மனுவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தற்போது நடந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் உற்சவருக்கு சாற்றப்பட்ட ஆபரணங்கள் போலி யானது என்று கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

488 மனுக்கள் பெறப்பட்டன

கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 488 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் புத்தூர் அரசு பார்வையற்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மன்னார்புரம் பார்வையற்ற மகளிர் மறுவாழ்வு இல்லத்திலும் நடந்த உடல் திறன் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகள் மற்றும் மறுவாழ்வு இல்ல பெண்கள் 30 பேருக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார்.


Related Tags :
Next Story