சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
நாட்டறம்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தரமான சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
நாட்டறம்பள்ளி அருகே கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தரமான சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
சாலை அமைக்கும் பணி
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜ வீதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. அப்போது அந்த வீதியில் கால்வாய் சீர் செய்யப்படாமல் அப்படியே சாலை போடும் பணி தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் சரிந்து விழும் அபாய நிலை உள்ளதால், கழிவு நீர் கால்வாயை சீர் செய்து தரமான சாலை அமைக்க வலியுறுத்தி மக்கள் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.
தற்காலிகமாக நிறுத்தம்
பின்னர் அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரமான சாலை அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.