போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்


போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்
x

வேலூரில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பொதுமக்களிடம் மனு பெற்று விசாரணை நடத்தினார்.

வேலூர்

வேலூரில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் பொதுமக்களிடம் மனு பெற்று விசாரணை நடத்தினார்.

சிறப்பு முகாம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சேகர், குணசேகரன், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது புகார்களை மனுக்களாக போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்கினர்.

பெறப்பட்ட மனுக்கள் குறித்து அவர் விசாரணை மேற்கொண்டார். பெரும்பாலான மனுக்கள் நிலம் அபகரிப்பு தொடர்பாக இருந்தது. எனவே, அதுகுறித்த மனுக்களை நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

39 மனுக்கள்

இந்த முகாம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் கூறியதாவது:-

வாரந்தோறும் புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த பொதுமக்கள் சிறப்பு குறை தீர்வு முகாம் நடைபெறும்.

பெறப்பட்ட மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் போலீஸ் நிலையங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு அளிக்கப்பட்ட புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தாலோ அல்லது காவல்துறையினர் நடவடிக்கை திருப்தி இல்லாமல் இருந்தாலோ மீண்டும் இந்த முகாமில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் புதிதாக 22 பேர் மனு அளித்தனர். மேலும் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக மனு அளித்த நபர்கள் 17 பேர் மீண்டும் நேற்றைய முகாமில் மனுக்களை அளித்தனர். பெறப்பட்ட 39 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.


Next Story