நெல்லையில் கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி
நெல்லையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
நெல்லை:
நெல்லையில் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.
அக்னி நட்சத்திரம் முடிவு
தமிழகத்தில் கோடை காலம் என்றாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் நெல்லையும் இடம் பிடிக்கும். இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் தொடக்க காலங்களில் லேசாக மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் முடிவடையும் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அக்னி நட்சத்திரம் காலத்தை எளிதாக கடந்து விட்டதாக மக்கள் நிம்மதி அடைந்திருக்கும் நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் முடிந்து விட்டாலும் வெயில் கொளுத்தி வருகிறது.
குடை பிடித்து செல்கிறார்கள்
நெல்லையில் காலை நேரத்தில் சூரியன் அனலை வீசிக்கொண்டு எழுந்து வருகிறது. நேற்று நண்பகல் நேரத்தில் சாலையில் செல்வோர் வெயிலின் தாக்கத்தால் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் காற்று புழுதி வாரி தூற்றியது போக்குவரத்துக்கு இடையூறாகவும் அமைந்தது. இதனால் சாலையில் நடந்து செல்லும் மாணவிகள், முதியோர் குடை பிடித்தபடி சென்றனர். நேற்றும் வெயில் அளவு 100 டிகிரியாக பதிவானது.
இனி தென்மேற்கு பருவ காற்றும், பருவ மழையும் பெய்தால் மட்டுமே வெப்பத்தை தணிக்க முடியும் என்பதால் மழை எப்போது பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.