சாலைப்பணியை தடுத்த தி.மு.க.வினரை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியல்
விழுப்புரம் அருகே சாலைப்பணியை தடுத்த தி.மு.க.வினரை கண்டித்து பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
கோலியனூர் ஒன்றியம் சகாதேவன்பேட்டை ஊராட்சிக்குட்பட்டது ராமையம்பாளையம். இப்பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி நேற்று காலை தொடங்கப்பட்டது.
இப்பணிகள் ஊராட்சி மன்ற தலைவரான அ.தி.மு.க.வை சேர்ந்த பிரபலட்சுமி குமார் மேற்பார்வையில் தொடங்கப்பட்ட நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக நடைபெற வேண்டிய பணியை ஆளும்கட்சியினர்தான் செய்வோம் எனக்கூறி தி.மு.க.வினர் சிலர் அங்கு வந்து, அந்த சாலைப்பணிகளை செய்ய விடாமல் தடுத்தனர்.
பொதுமக்கள் மறியல்
இதுபற்றி சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் பிரபலட்சுமி குமார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ராமையன்பாளையம் மெயின் ரோட்டுக்கு திரண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள், காலை 11.30 மணியளவில் அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளை கண்டித்தும், மக்கள் பணியை செய்ய விடாமல் தடுத்த தி.மு.க.வினரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இப்பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் காலை 11.40 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.