குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் 4 மணி நேரம் காத்திருப்பு
மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்ததால் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் 4 மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்ததால் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் 4 மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளிப்பதற்காக காலை 10 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காத்திருந்தனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சை மண்டல அளவிலான காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
காத்திருப்பு
இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனுக்களை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் பொதுமக்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 4 மணி நேரம் அங்கேயே காத்திருக்க நேரிட்டது.
பொதுமக்கள் வேதனை
மதியம் 2.30 மணி அளவில் ஐ.ஜி. கார்த்திகேயன் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இது போன்ற உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றால் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்து ஒரு நாள் கூட்டத்தை ஒத்திவைத்திருக்கலாம் என்று மனு அளிக்க வந்தவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்