தமிழகத்தில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவதே நோக்கம் -அண்ணாமலை பேச்சு


தமிழகத்தில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவதே நோக்கம் -அண்ணாமலை பேச்சு
x

தமிழகத்தில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துவதுதான் நோக்கம் என்று சென்னையில் நடந்த கருத்தரங்கில் அண்ணாமலை பேசினார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. சிந்தனையாளர் பிரிவு சார்பில், 'தமிழக உரையாடல்கள்-2022' 'தமிழகம்-கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. கருத்தரங்குக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கி, 'தமிழகத்துக்கான எனது சிந்தனைகள் மற்றும் எதிர்காலத்தில் பா.ஜ.க.வால் தமிழகத்துக்கு என்ன வழங்கமுடியும்' என்ற தலைப்பில் பேசியதாவது:-

ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் அரசியல் கட்சிகள் நடத்தப்படுகிறது. தேசிய கட்சி என்பதற்காக, தமிழகத்திலும் பா.ஜ.க.வின் கிளை இருந்துவிட்டு போகட்டும் என்பதற்காக பா.ஜ.க. ஆரம்பிக்கப்படவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியில் அமரவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

தமிழகத்தில் எதற்காக பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என கேள்விகளை அடுக்குகின்றனர். இந்த கேள்விகளுக்கான பதிலை மக்களுக்கு சரியாக புரிய வைத்தால், தமிழகத்தில் நிச்சயம் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிடும். பா.ஜ.க.வை போல் கடுமையாக உழைக்கும் கட்சி தமிழகத்தில் எதுவும் இல்லை. எப்போதும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பா.ஜ.க.வினர் ஓடிக்கொண்டே இருக்கின்றனர். மக்கள் மத்தியில் உணர்ச்சி பூர்வமாக இருக்கும் கட்சிதான் எப்போதும் வெற்றி பெறுகிறது. அந்த உணர்ச்சியை சரி செய்யாத வரை கடுமையாக உழைத்தாலும், எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது.

சாதிகள் ஒழியவில்லை

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 11-ந்தேதி), அவரது பெயரில் தேசிய தாய்மொழி தினம் என்ற பெயரில் அனைத்து தாய் மொழிகளுக்கான தினத்தை மோடி தலைமையிலான அரசு அறிவிக்க இருக்கிறது. திராவிட கட்சிகளாலும், ஆட்சிகளாலும் தமிழகத்தில் சாதிகள் ஒழிந்து விடவில்லை.

நீண்ட காலமாக இருக்கும் காவிரி நதிநீர், மொழி பிரச்சினையை வைத்து தமிழகத்தில் அரசியல் நடக்கிறது. இந்த பிரச்சினையை தீர்க்ககூடிய வல்லமை பா.ஜ.க.விடம் உள்ளது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழிக்கு பாதுகாவலனாக இருந்துக்கொண்டிருக்கிறார்.

தமிழக மக்கள் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை பார்த்தால் தான், திராவிட கட்சிகளின் ஏமாற்று வேலை தெரியவரும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால், தமிழகத்துக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

காசி-தமிழகம் தொடர்பு

பா.ஜ.க. இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 'வரலாற்று ரீதியாக கங்கை நதி, பொன்னி கலாசாரம்' என்ற தலைப்பில் பேசும்போது, ''பழங்காலம் முதல் காசிக்கும், தமிழகத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. தமிழ் கலாசாரம் வட இந்தியாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழுக்கும், இந்திக்குமான தொடர்பு பழங்காலத்தில் இருந்தே இருக்கிறது. அதனை யாராலும் பிரிக்க முடியாது'' என்றார்.


Next Story