பள்ளி மாணவிகள் 2 பேரை கடத்திய ரவுடி கைது


பள்ளி மாணவிகள் 2 பேரை கடத்திய ரவுடி கைது
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பள்ளி மாணவிகள் 2 பேரை கடத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மாணவியின் தங்க சங்கிலியை விற்று ஊர் சுற்றியது அம்பலமானது.

கன்னியாகுமரி

குளச்சல்:

குமரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பள்ளி மாணவிகள் 2 பேரை கடத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர். மாணவியின் தங்க சங்கிலியை விற்று ஊர் சுற்றியது அம்பலமானது.

பிளஸ்-2 மாணவிகள்

மார்த்தாண்டம் அருகே உள்ள காட்டாத்துறை பகுதியிலுள்ள குட்டக்குழி காலனியை சேர்ந்தவர் வினு (வயது 22) பிளம்பர். இவர் சிராயன்குழி பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளது.

இந்த நிலையில் வினு வேலைக்கு சென்ற இடத்தில் காப்புக்காடு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. அந்த மாணவி மூலம் திருவட்டார் பகுதியை சேர்ந்த மற்றொரு பிளஸ்-2 மாணவி அறிமுகமானார். அவருடனும் வினு நெருக்கமாக பழகினார். பின்னர் 2 மாணவிகளையும் அழைத்து கொண்டு பல இடங்களுக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி 2 மாணவிகளும் மாயமானார்கள்.

இது குறித்து புதுக்கடை மற்றும் திருவட்டார் போலீஸ் நிலையங்களில் மாணவிகளின் குடும்பத்தினர் தனித்தனியே புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது வினு மீது திருவட்டார் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு, மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், ரவுடி பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் வினு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு சிறிய வீட்டில் 2 மாணவிகளுடன் தங்கி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

சென்னையில் மீட்பு

அதைத்தொடர்ந்து போலீசார் சென்னை விரைந்து சென்று வினுவுடன் இருந்த 2 மாணவிகளையும் மீட்டனர். மேலும் ரவுடி வினுவையும் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

2 மாணவிகளுடன் பழகிய வினு, மூன்று பேரும் ஜாலியாக ஊர் சுற்றலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துள்ளார். அதை நம்பிய ஒரு மாணவி வீட்டில் இருந்த தங்க சங்கிலியை எடுத்த வந்தார். அதனுடன் 3 பேரும் தூத்துக்குடி புறப்பட்டு சென்றனர். அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு சென்றனர். அங்கு பல இடங்களில் சுற்றியுள்ளனர். அதற்கு வசதியாக ெ்சன்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் சிறிய அறை கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். வீட்டு உரிமையாளிரிடம் நாங்கள் 3 பேரும் உறவினர்கள் என்று கூறியதால் வீடு வாடகைக்கு கிடைத்தது.

ஊர் சுற்றுவதற்கு பணம் தேவைப்பட்டதால் மாணவி கொண்டு வந்த தங்க சங்கிலியை ரூ.60 ஆயிரத்துக்கு விற்று அதன் மூலம் பல இடங்களை சுற்றிப்பார்த்ததும் தெரிய வந்தது.

மாணவிகளுக்கு பரிசோதனை

இந்தநிலையில் மீட்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது.

அப்போது மாணவிகள் 2 பேரும் மன உளைச்சலில் இ்ருப்பதாகவும், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்த வழக்கு தற்போது குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு ரவுடி வினுவை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்்.


Next Story