ரவுடிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்
ரவுடிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர் என்று காயம் அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
ரவுடிகள் தாக்கியதில் காயம் அடைந்த திருச்சி உறையூர் குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளான துரைசாமி, சோமசுந்தரம் ஆகியோரை கைது செய்து, பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணத்தை மீட்பதற்காக அவர்களை அழைத்து கொண்டு சென்றோம். திருச்சி டவுன், அண்ணாநகர், சமயபுரம், உறையூர் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று, அப்பகுதிகளில் ரவுடிகள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தோம்.
பின்னர் அந்த ஆயுதங்களை ஜீப்பில் வைத்துக்ெகாண்டு குழுமாயி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தோம். அப்போது, ரவுடி துரைசாமி போலீஸ் ஜீப் டிரைவர் அசோகனின் கழுத்தை பிடித்து தாக்கினார். இதனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அங்குள்ள பள்ளத்தில் இறங்கியது. இதைத்தொடர்ந்து துரைசாமியும், சோமசுந்தரமும் ஜீப்பில் இருந்த கத்தியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து நாங்கள், அவர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது கத்தியால் எங்களை வெட்டி தாக்க முயன்றனர். அப்போது அவர்களை எச்சரிக்கை செய்யும் வகையில் வானத்தை நோக்கி ஒரு முறை துப்பாக்கியால் சுட்டேன். பின்னர் சோமசுந்தரம் என் மீது கத்தியால் வெட்டினார். இதில் எனது இடது கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஆக்ரோஷமாக கத்தியால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் போலீசாரான சிற்றரசு, அசோகன் ஆகியோருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எங்களை தற்காத்துக்கொள்ள அவர்களின் காலில் முட்டுக்கு கீழே துப்பாக்கியால் சுட்டேன். இதில் அவர்கள் குண்டு அடிபட்டு கீழே விழுந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.