ரெயில்வே போலீஸ் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது
ஊட்டியில் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது.
ஊட்டி,
ஊட்டியில் 2 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது.
கனமழை கொட்டியது
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை முதல் ஊட்டியில் வெயில் அடித்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 2 மணி நேரம் கனமழையாக கொட்டி தீர்த்தது. ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு மழைக்கு ஒதுங்கி நின்றனர். கனமழையால் தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கால்வாயில் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டது.
இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.
கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மழைநீருடன், சாக்கடை கழிவுநீரும் வழிந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். படகு இல்லம் செல்லும் சாலையில் ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
இதனால் ஊட்டியில் இருந்து காந்தலுக்கு நகர பஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரெயில்வே போலீஸ் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. படகு இல்ல சாலை வழியாக வந்த கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. உடனடியாக காரில் இருந்த வாலிபர் கீழே இறங்கி சென்றார். தண்ணீரில் சிக்கிய கார் மீட்பு வாகனம் மூலம் மீட்கப்பட்டது. மேலும் பஸ்நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதேபோல் உழவர் சந்தை கடைகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கியது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பலத்த மழை பெய்யும் போதெல்லாம், அரசு ஆஸ்பத்திரி பகுதியில் இருந்து கழிவுநீருடன் மழைநீர் மார்க்கெட்டுக்குள் தேங்கி நிற்கிறது. மார்க்கெட்டில் இருந்து கோடப்பமந்து கால்வாய்க்கு செல்லும் குழாய் ஆங்கிலேயர் காலத்தில் பதிக்கப்பட்டது.
இந்த சிறிய குழாய் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் மார்க்கெட்டில் தேங்குவது வாடிக்கையாகி விட்டது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. எனவே, மார்க்கெட்டில் தண்ணீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.