பச்சரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்ல மறுத்து ரேஷன்கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்


பச்சரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்ல மறுத்து ரேஷன்கடை ஊழியர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 30 Sept 2023 12:15 AM IST (Updated: 30 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் சேமிப்பு கிடங்கில் பச்சரிசி மூட்டைகளை ஏற்றி செல்ல மறுத்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் அதிகாரியுடன் திடீர் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்

சேமிப்பு கிடங்கு

காட்டுமன்னார்கோவிலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான வட்ட சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு கடலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்படும். பின்னர் இங்கிருந்து காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள168-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

அதன்படி கடந்த 2 மாதங்களாக சேமிப்பு கிடங்கில் இருந்து பச்சரிசி மூட்டைகள் அதிக அளவில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் அரிசி தரமற்று இருப்பதாக கூறி பொதுமக்கள் யாரும் அதை வாங்க முன் வராததால், ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பச்சரிசி மூட்டைகள் அதிக அளவில் தேங்கி வீணாகி கிடப்பதாக கூறப்படுகிறது.

பச்சரிசி மூட்டைகள்

இந்த நிலையில் நேற்று ரேஷன் கடை ஊழியர்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்வதற்காக குடோனுக்கு வந்தனர். அப்போது கடலூர் உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு கிடங்குளில் இருந்து 8-க்கும் மேற்பட்ட லாரிகளில் பச்சரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இந்த பச்சரிசி மூட்டைகளை ரேஷன் கடைகளுக்கு எடுத்து செல்ல கடை ஊழியர்களிடம் சேமிப்பு கிடங்கு அதிகாரி கூறினார்.

ஆனால் ஏற்கனவே கடைகளில் உள்ள பச்சரிசி மூட்டைகள் வீணாகி உள்ளதால் நாங்கள் வண்டுகள் நிறைந்த தரமற்ற பச்சரிசி மூட்டைகளை ஏற்றி செல்ல மாட்டோம் எனக்கூறி அரிசி மூட்டைகளை ஏற்றிச்செல்ல மறுத்தனர். இதனால் லாரிகளிலிருந்து அரிசி மூட்டைகளை இறக்க முடியாமல் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

வாக்குவாதம்

அப்போது சேமிப்பு கிடங்கின் அதிகாரி, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் வழங்கப்படும் அரிசி மூட்டைகளின் அளவில் 40 சதவீதம் பச்சரிசி மூட்டைகள் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் தன்னால் எதுவும் செய்ய இயலாது. எனவே பச்சரிசி மூட்டைகளை கண்டிப்பாக ஏற்றிச் செல்ல வேண்டும் என்றார். இதனால் ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கும், சேமிப்பு கிடங்கு அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் சுமார் 5 மணி நேரத்துக்கு பிறகு பச்சரிசி மூட்டைகளை விற்பனையாளர்கள் லாரிகளில் ஏற்றி செல்ல சம்மதித்தனர். இதன் பிறகு லாரிகளில் கொண்டு வரப்பட்ட பச்சரிசி மூட்டைகளை ரேஷன் கடை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி சென்றனர்.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story