ரியல் எஸ்டேட் அதிபரை அடித்துக்கொன்ற மனைவி


ரியல் எஸ்டேட் அதிபரை அடித்துக்கொன்ற மனைவி
x

ரியல் எஸ்டேட் அதிபரை அடித்துக் கொன்று உடலை எரித்த அவரது மனைவி மற்றும் அந்த பெண்ணின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தது தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 43) என்பது தெரியவந்தது.

அடித்துக்கொலை

ரியல் எஸ்டேட் அதிபரான பிரகாசுக்கு, லட்சுமி (36) என்ற மனைவி உள்ளார். இதையடுத்து அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கணவரை அவர் அடித்துக் கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் அவர் தனது கள்ளக்காதலன் சின்னராஜ் (38) என்பவர் உதவியுடன் உடலை சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்று எரித்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து லட்சுமி, அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான லட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

பாலியல் தொல்லை

எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் போதையில் வந்து அடிக்கடி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 18-ந் தேி அன்றும் குடித்து விட்டு என்னிடம் வந்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அப்போது நான் வீட்டில் இருந்த கட்டையால் அவரது தலையில் ஓங்கி அடித்தேன். அதில் அவர் இறந்தார்.

இதையடுத்து உடலை அங்கிருந்து மறைக்க முடிவு செய்தேன். இதற்காக எனது கள்ளக்காதலன் சின்னராஜ்க்கு போன் செய்தேன். சின்னராஜ் சரக்கு வேன் டிரைவர் ஆவார். அவருடன் எனக்கு பள்ளி பருவம் முதலே காதல் இருந்தது. திருமணத்திற்கு பிறகும், எனக்கு அவருடன் கள்ளக்காதல் இருந்தது.

உடலை எரித்தோம்

நான் போன் செய்து அழைத்ததும் சின்னராஜ் எங்கள் வீட்டிற்கு வந்தார். பின்னர் எனது கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து சரக்கு வாகனத்தில் போட்டு சானமாவு வனப்பகுதிக்கு கொண்டு சென்றோம். ஆள் நடமாட்டம் இல்லை என்பதை அறிந்ததும் அங்கு உடலை கொண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டு வந்து விட்டோம்.

உடலை எரித்ததால் போலீசார் எங்களை கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்தோம். ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைதான லட்சுமி, அவரது கள்ளக்காதலன் சின்னராஜ் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story