வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்த ரியல் எஸ்டேட் அதிபர்


வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்த ரியல் எஸ்டேட் அதிபர்
x

புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் காட்பாடியில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையிலட் கொலை செய்யப்பட்டுள்ளார் என புதுச்சேரி எம்.எல்.ஏ குற்றம் சாட்டினார்.

வேலூர்


புதுச்சேரி ரியல் எஸ்டேட் அதிபர் காட்பாடியில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையிலட் கொலை செய்யப்பட்டுள்ளார் என புதுச்சேரி எம்.எல்.ஏ குற்றம் சாட்டினார்.

ரியல் எஸ்டேட் அதிபர் மர்மச்சாவு

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 51). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் தமிழகம் முழுவதும் நிலங்களை வாங்கி அதனை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளார். ஆனால் அந்த இடத்தை அதன் உரிமையாளர் தராததால் வாங்கிய பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு சரவணன் கேட்டுள்ளார்.

இதுகுறித்து பேசுவதற்காக சரவணன் காட்பாடிக்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து விருதம்பட்டு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை என குற்றச்சாட்டு

இந்தநிலையில் புதுச்சேரி எம்.எல்ஏ., வைத்தியநாதன் காட்பாடி வந்தார். மர்ம மரணம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு விருதம்பட்டு போலீசாரிடம் வலியுறுத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சரவணை நிலம் வாங்கியதில் கொடுத்த பணத்தை திருப்பி அளிப்பதாக கூறி காட்பாடிக்கு வரவழைத்து உள்ளனர். அதனை நம்பி சரவணன் காட்பாடி வந்துள்ளார். ஆனால் ஒரு இடத்தில் இறக்கிவிட்டுவிட்டு கார் டிரைவரை வேறு எங்கோ அனுப்பி விட்டனர். இரவு முழுவதும் அவரை துன்புறுத்தி கையொப்பம் பெற்றுள்ளனர். இது திட்டமிட்ட கொலை. இதில் போலீசார் சரியான கோணத்தில் விசாரிக்கவில்லை என தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் ஒரு கட்டிடத்தில் இறந்துகிடந்தார். எனவே இது சந்தேக மரணம் என நாங்கள் வழக்குப்பதிவு செய்துள்ளோம். சரவணன் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்தபிறகு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story