140 கோடி மக்களை நோய்களில் இருந்து காப்பதே உண்மையான வெற்றி


140 கோடி மக்களை நோய்களில் இருந்து காப்பதே உண்மையான வெற்றி
x
தினத்தந்தி 2 Sept 2023 2:15 AM IST (Updated: 2 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

சந்திரயானை நிலவுக்கு அனுப்புவது மட்டும் வெற்றியல்ல என்றும், 140 கோடி மக்களை நோய்களில் இருந்து காப்பதே உண்மையான வெற்றி என கவிஞர் வைரமுத்து பேசினார்.

மதுரை

மதுரை

சந்திரயானை நிலவுக்கு அனுப்புவது மட்டும் வெற்றியல்ல என்றும், 140 கோடி மக்களை நோய்களில் இருந்து காப்பதே உண்மையான வெற்றி என கவிஞர் வைரமுத்து பேசினார்.

முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா மற்றும் வரவேற்பு விழா நேற்று நடைபெற்றது.

கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு பேசியதாவது:-

இன்றைய மருத்துவ மாணவர்கள் நாளைய உலகத்தை தாங்கிப்பிடிக்கும் தங்கத்தூண்கள். பல்லாயிரக்கணக்கானோரை காப்பாற்றும் கடமை உங்களுக்கு உண்டு. மற்ற கல்வியை விட மருத்துவக்கல்வி ஒரு படி உயர்ந்தது என்றே கருதுகிறேன். இதர கல்வி அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தோடு தொடர்புடையது. ஆனால் மருத்துவக்கல்வி மட்டுமே உடலோடும், உயிரோடும் தொடர்புடையது. நாட்டின் மனித வளத்தோடு தொடர்புடையது. எனவே அது ஒரு படி உயர்ந்தது.

மருத்துவர்கள் மனிதர்களை விட உயர்ந்தவர்கள். நோயாளிகளை வாழவைக்கும் கடவுள்களாக திகழ்பவர்கள்.

140 கோடி மக்களை காப்பதுதான்....

மருத்துவர்கள் இந்த சமூகத்தை காக்கும் கருவூலமாக திகழ்பவர்கள். சமூகத்துக்கு சேவை செய்வதற்காகவே பிறந்தவர்கள்.

எளிய குடும்பத்தில் இருந்தும், விவசாயிகளின் வீட்டில் இருந்தும், தொழிலாளியின் குடும்பத்தில் இருந்தும் சாதாரண மாணவர்களாக மருத்துவப் படிப்பில் இணைந்திருக்கும் உங்களுக்கு எதிர்காலத்தில் இந்த சமூகம் அளிக்கும் மரியாதை, அந்தஸ்து மிக உயர்வானது. இந்தியாவின் வெற்றி என்பது நிலவுக்கு சந்திரயானை அனுப்புவது அல்ல. நாட்டில் உள்ள 140 கோடி மக்களையும் நோய்களில் இருந்து காப்பதுதான் நாட்டுக்கு கிடைக்கும் உண்மையான வெற்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

241 மாணவர்கள்

விழாவில் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் தனலட்சுமி, மாணவர் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ராஜ் கோகிலா மற்றும் பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 250 இடங்களில் 241 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதர 9 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின்படி நிரப்பவேண்டிய இடங்கள் என்பதால் செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வின் அடிப்படையில் 9 இடங்கள் நிரப்பட்டும் என்று மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story