இறந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்
மயிலாடுதுறையில் சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறையில் சுடுகாட்டிற்கு பாதை வசதி ஏற்படுத்தி தரக்கோரி இறந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
சுடுகாட்டுக்கு பாதை வசதி
மயிலாடுதுறை நகரையொட்டி உள்ள மாப்படுகை கிராமத்தில் ரெயில்வே கேட் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக மயிலாடுதுறை காவிரி கிட்டப்பா பாலம் அருகே சுடுகாடு உள்ளது.
இந்த சுடுகாட்டிற்கு செல்வதற்கு நிரந்தர பாதை இல்லை. யாரேனும் இறந்தால் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு அவர்களது உறவினர்கள் பெரும் தொகையை செலவிட்டு பொக்லின் எந்திரம் அல்லது தொழிலாளர்களை கொண்டு பாதையை சுத்தம் செய்து, அதன் பின்னரே உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
சாலை மறியல்
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மாப்படுகையைச் சேர்ந்த பக்கிரிசாமி (வயது73) என்பவர் இறந்ததை அடுத்து அவரது உடலை எடுத்துச் செல்வதற்காக உறவினர்கள் சுடுகாட்டு பாதையை சுத்தம் செய்தனர்.
பின்னர் உடலை தகனம் செய்வதற்காக எடுத்துச் சென்றபோது மாப்படுகை ரெயில்வே கேட் அருகில் உடலை இறக்கி வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுடுகாட்டிற்கு செல்ல நிரந்தர பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் உடலை அங்கிருந்து தூக்கிக்கொண்டு சுடுகாட்டுக்கு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பூம்புகார்- கல்லணை சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.