மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததால் பரபரப்பு
திண்டுக்கல்லில், மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைகள் மூடல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 15 கடைகள் உள்பட, தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டன. இதில் திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையும் ஒன்று.
இந்த கடை வழக்கம் போல் நேற்று மதியம் 12 மணிக்கு திறக்கப்படவில்லை. மேலும் கடையின் முன்பு இருந்த 'டாஸ்மாக் மதுபான கடை' என்று அச்சிடப்பட்ட பதாகை அகற்றப்பட்டு இருந்தது. இன்று முதல் (22-06-2023) மதுவிற்பனை இல்லை என்ற விவரம் அச்சிடப்பட்ட நோட்டீஸ் கடையில் ஒட்டப்பட்டு இருந்தது.
இதற்கிடையே வழக்கமாக அந்த கடையில் மதுகுடிக்க வரும் மதுப்பிரியர்கள் கடை மூடப்பட்டிருப்பதையும், இன்று முதல் மது விற்பனை இல்லை என்ற அறிவிப்பையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிய மதுபிரியர்கள், அடுத்த கடையை நோக்கி நடையை கட்டினர்.
மீண்டும் திறப்பு
இது ஒரு புறம் இருக்க, மதியம் 12.30 மணி அளவில் அந்த டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அங்கு வந்தனர். பின்னர் மூடப்பட்டிருந்த கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கிருந்த மதுபான பாட்டில்கள் வைக்கப்பட்ட பெட்டிகளில் சிலவற்றை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அரசு உத்தரவுப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டு மதுவிற்பனை நடக்கிறதோ? என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள், திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ரவுண்டுரோடு டாஸ்மாக் கடைக்கு விரைந்தனர். பின்னர் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அரசு உத்தரவுப்படி மூடப்பட்ட பிறகு எதற்காக மீண்டும் கடையை திறந்தீர்கள், மதுவிற்பனை ஏதும் செய்தீர்களா? என்று அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு துளைத்தனர். அதற்கு பதிலளிக்க முடியாமல் ஊழியர்கள் திணறினர்.
திறந்தது ஏன்?
இந்தநிலையில் விற்பனைக்காக மதுபாட்டில்களை அவர்கள் எடுக்க வில்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் கடையை போலீசார் முன்னிலையில் ஊழியர்கள் மூடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுபானங்களின் இருப்பை சோதனை செய்வதற்காகவே திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை ஊழியர்கள் திறந்தனர். மற்றபடி விற்பனைக்காக கடையை திறக்கவில்லை. இருப்பு சரிபார்க்கப்பட்ட பிறகு மாலையில் அங்கிருந்த மதுபான பாட்டில்கள் முள்ளிப்பாடியில் உள்ள மதுபான குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார். மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.