குடியிருப்பு பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்தது
நாகநதி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் கால்வாய்களை தூர்வார கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைவெள்ளம் சூழ்ந்தது
வேலூர் மாவட்டத்தில் வேலூர், கணியம்பாடி, பென்னாத்தூர், சோழவரம், நாகநதி, துத்திக்காடு, நஞ்சுகொண்டாபுரம், கீழ்அரசம்பட்டு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக நாகநதி ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. துத்திக்காடு ஊராட்சி நாகநதி கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மழைநீர் கால்வாய்கள் தூர்வாராமல் இருப்பதே குடியிருப்பு பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்ததற்கு காரணம் என அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாத்துமதுரை, நெல்வாய், வேப்பம்பட்டு, சின்னபாலம்பாக்கம், சோழவரம், சாத்துபாளையம் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் நாகநதி கிராமம் பாண்டியன் மடுவு வழியாக நாகநதி ஆற்றில் சென்று கலக்கிறது.
போக்குவரத்து துண்டிப்பு
இந்த உபரி நீர் செல்லும் கால்வாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் சுமார் 10 அடி அகலம் உள்ள கால்வாய் 3 அடியாக உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை காரணமாக துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட குரங்கோட்டி கொட்டாய், ஜல்லிவீடு கொட்டாய், போலன்வீட்டு கொட்டாய், பாண்டியன் மடுவு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதிகளுக்கு செல்லும் சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இருளில் மூழ்கியது
மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி இருளில் மூழ்கியது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை தூர் வாரவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.