பாலாற்று பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது


பாலாற்று பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
x

காட்பாடி- வேலூர் பாலாற்று பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

பாலாற்று பாலம்

வேலூர்- காட்பாடியை இணைக்கும் வகையில் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே 2 பாலங்கள் அமைத்துள்ளது. இந்த பாலத்தின் வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. போக்குவரத்துக்கு இன்றியமையாத பாலங்களாக அவை திகழ்கிறது.

வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் பாலத்தின் அடிப்பகுதியில் பாலாற்றில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. தண்ணீர் இல்லாத நேரத்தில் பொதுமக்கள் இதனை பாதையாக பயன்படுத்தி வந்தனர். பாலாற்றில் வெள்ளப்பெருக்கு, மண் அரிப்பு போன்ற காரணங்களால் கான்கிரீட் தளம் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தின் தூண்கள் வெளியே தெரியும் வகையில் காணப்படுகிறது. இதை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தடுப்புச்சுவர் இடிந்தது

இந்த நிலையில் 2 பாலத்தின் மேற்பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை உள்ளது. இந்த பாதையின் தடுப்புசுவர் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. சில இடங்களில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. மேலும் காட்பாடியில் இருந்து வேலூர் வரும் பாலத்தின் தடுப்புச்சுவரில் இருந்த மின்கம்பம் சரிந்து விழுந்தது. அப்போது தடுப்புச்சுவரும் சில அடி தூரம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

அந்த வழியாக ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை என்பதால் இரவில் அவர்கள் எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றுக்குள் விழ வாய்ப்பு உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன்பு பாலாற்றில் தடுப்புச்சுவர் கட்டப்பட வேண்டும். பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ள தடுப்புச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story