20 மலைகிராமங்களை இணைக்கும் சாலை ரூ.140 கோடியில் மேம்படுத்தப்படும்


20 மலைகிராமங்களை இணைக்கும் சாலை ரூ.140 கோடியில் மேம்படுத்தப்படும்
x

ஜவ்வாதுமலையில் உள்ள 20 மலை கிராமங்களை இணைக்கும் சாலை ரூ.140 கோடியில் ேமம்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலை

ஜவ்வாதுமலையில் உள்ள 20 மலை கிராமங்களை இணைக்கும் சாலை ரூ.140 கோடியில் ேமம்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருவண்ணாமலையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

பண்ணைக் குட்டைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்கள் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நீர்மேலாண்மைப் பணிகளை மிகச் சிறப்பாக செய்திருக்கக்கூடிய மாவட்டமாக இந்த மாவட்டம் அமைந்திருக்கிறது.

நீர் மேலாண்மையை ஒரு பேரியக்கமாகவே நடத்தி காட்டி இருக்கிறீர்கள். 1,121 பண்ணைக் குட்டைகளை 30 நாட்களில் அமைத்து சாதனை படைத்த மாவட்டம் தான் இந்தத் திருவண்ணாமலை மாவட்டம்.

தற்போது இந்த பண்ணைக் குட்டைகளில் மீன்வளத் துறை மூலமாக, மீன் குஞ்சுகள் இன்றைக்கு வளர்க்கப்பட்டு வருகிறது. பண்ணைக்குட்டைகளின் கரைகளில் மரம், காய்கறி, பழச்செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் உழவர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் 6 முதல் 7 அடி வரை உயர்ந்துள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி காட்டுவதன் மூலமாக மக்களின் உயிர் பிரச்சினையான குடிநீர் தேவையில், மாபெரும் சாதனையைச் செய்துள்ள திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தை உங்கள் அனைவரின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் நான் மனதார பாராட்டி வாழ்த்துறேன்.

இத்தகைய சாதனையை அனைத்து மாவட்டங்களும் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.

தனிக்கவனம் செலுத்த வேண்டும்

இந்திய அளவில் முதல்முறையாக தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தில், சுய உதவிக்குழுக்களின் வட்டார அளவிலான கூட்டமைப்பு மூலம் பாரத் பெட்ரோலிய நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை மையம் அமைக்கப்பட்டு நல்ல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விற்பனை மையம் 834 மகளிர் சுய உதவிக்குழுக்களின் 11 ஆயிரத்து 175 உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்பட்டு மாதம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் லாபம் ஈட்டுகிறது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய அளவில் முதல்முறையாக, ஜவ்வாது மலையில் பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 2500 பேர் சேர்ந்து, உற்பத்தியாளர் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

மலைப் பொருட்களைக் கொண்டதாக இந்த நிறுவனம் இருக்கிறது. இது மிக நல்ல முயற்சி. பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதேபோல் பல்வேறு முன் முயற்சிகளை இந்த மாவட்ட நிர்வாகம் செய்து வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய சிறப்புப் பணிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தைப் போல மற்ற மாவட்டங்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வழக்கமான திட்டங்களையும் தாண்டிய, சிறப்புத் திட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களும் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். அதை மையப்படுத்தி திட்டங்கள் வகுக்க வேண்டும்.

சாலையை மேம்படுத்த ரூ.140 கோடி

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்திலும், வேலூர் மாவட்டத்திலும் இருக்கக்கூடிய ஜவ்வாதுமலை பகுதியில் சுமார் 75 ஆயிரம் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்கள் வாழக்கூடிய 20 மலைக் கிராமங்களை இணைக்கக்கூடிய பரமனந்தல், ஜமுனாமரத்தூர், அமிர்தி சாலையை மேம்படுத்த வேண்டுமென்றும், இந்த வழியாக போதிய பஸ் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டுமென்றும் இவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை ஏற்று இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வனத் துறையினுடைய அனுமதியைப் பெற்று ரூ.140 கோடி செலவில் சாலை அகலப்படுத்தி, மேம்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 


Next Story