கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைப்பு
நாகர்கோவிலில் கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
'நாகர்கோவில்,
நாகர்கோவிலில் கார் நின்ற இடத்தை விட்டு அவசர கதியில் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
கார் நின்ற இடத்தை விட்டு சாலை
நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டதால் ஏராளமான சாலைகள் படுமோசமாக காட்சி அளித்தது. இதனை தொடர்ந்து தற்போது சாலைகள் சீரமைப்பிற்காக நிதி ஒதுக்கப்பட்டு தெருவாரியாக சாலை பணி நடந்து வருகிறது. அந்த வகையில் வடிவீஸ்வரம் நடராஜபுரம் ஆசாரிமார் தெற்கு தெருவில் நேற்று இரவு சாலை போடும் பணி மும்முரமாக நடந்தது.
அப்போது ஒரு திருமண மண்டபம் முன்பு சாலையில் கார் நின்றது. அந்த கார் யாருடையது என்று தெரியவில்லை. வெகுநேரமாக அதே இடத்தில் நின்றதால், சாலை பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் அவசர கதியில் கார் நின்ற இடத்தை விட்டு விட்டு மற்ற இடங்களில் ஜல்லியை நிரப்பி சாலை போட்டனர்.
வீடியோ வைரல்
இதனை கவனித்த பொதுமக்கள் இது என்னய்யா, நடுவுல கொஞ்சம் சாலையை காணோம் என்று ஆதங்கத்தை தெரிவித்தனர். அதற்கு காரை தள்ள முடியாததால் மற்ற இடங்களில் சாலை போடுகிறோம் என சாலை அமைத்த பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை வீடியோ எடுத்த இளைஞர்கள் சிலர் சமூகவலைதளத்தில் பதிவிட்டு கிண்டலாக மீம்ஸ் செய்து பரப்பினர். இந்த வீடியோ வைரலானதால் நாகர்கோவிலில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.