அமிர்தி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்


அமிர்தி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்
x

அமிர்தி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

வேலூர்

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் அளித்த புகார்கள் மற்றும் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அணைக்கட்டு அருகே வரதலம்பட்டு ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர் மஞ்சுளா என்பவர் அளித்துள்ள மனுவில், ஊராட்சி தலைவர் இறந்ததையடுத்து மன்ற உறுப்பினர்கள் என்னை உதவி தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால் அதை செயல்படுத்தாமல் உள்ளனர். எனக்கு போதிய வார்டு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது. எனவே தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பு

குடியாத்தம் தாலுகா அக்ராவரம் பகுதி மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டு பாதை மற்றும் சுடுகாடு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

லத்தேரி அருகே செஞ்சி கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் நாங்கள் பல வருடங்களாக சுடுகாட்டிற்காக பயன்படுத்தி வந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அந்த இடத்தை அளந்து சுற்றுச்சுவர், எரிமேடை கட்டித்தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில், வேலூர்-காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பொதுமக்கள் வெட்ட வெளியில் நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர். இங்கு நிழற்குடை இல்லாததால் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். மேலும் அருகில் செல்லும் கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

தரைப்பாலம் அமைக்க வேண்டும்

கணியம்பாடி அருகே நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் ஊரின் வழியாக துத்திக்காடு ஊராட்சி முதல் அமிர்தி வரை செல்லும் சாலையானது கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும், மேலும் நஞ்சுகொண்டாபுரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே ஓடும் ஆற்றை கடக்க வேண்டியுள்ளது. அந்த பகுதியில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

வேலூர் அல்லாபுரத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மகள் மோனிகா (வயது 10) சுதந்திரதினத்தையொட்டி தான் சேர்த்து வைத்த ரூ.2 ஆயிரத்தில் 76 தேசிய கொடிகளை வாங்கினார். அதை மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.


Next Story