சிவாலய பக்தர்கள் ஓட்டமாகவும், நடந்தும் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்


சிவாலய பக்தர்கள் ஓட்டமாகவும், நடந்தும் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்
x

கால்வாய் கழிவுகள் கொட்டப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்ட தும்பக்கோடு-திருநந்திக்கரை சிவாலய ஓட்டச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

கால்வாய் கழிவுகள் கொட்டப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்ட தும்பக்கோடு-திருநந்திக்கரை சிவாலய ஓட்டச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட சாலை

குலசேகரம் அருகே தும்பகோட்டில் இருந்து திருநந்திக்கரைக்கு பேச்சிப்பாறை கால்வாய் கரையோரமாக ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கால்வாயில் தூர்வாரும் பணி நடந்தது. அப்போது கால்வாயில் இருந்து தூர்வாரப்பட்ட மண் மற்றும் கழிவுகள் இந்த சாலையில் கொட்டப்பட்டன. பின்னர் அவற்றை சாலையில் இருந்து அகற்றவில்லை. காலப்போக்கில் இந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சிவாலய ஓட்டத்துக்கு...

இந்த சாலையானது பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டத்தின்போது 4-வது சிவாலயமான திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி வந்த ஒரு வழிப்பாதையாக இருந்து வருகிறது.

தற்போதும் திருநந்திக்கரையில் இருந்து வியாலி வரை தார் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் தும்பகோடு முதல் கொச்சுவீட்டுப்பாறை வரை சாலை மூடிய நிலையிலேயே கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் சிவாலய ஓட்ட பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கோரிக்கை

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சுதா கூறியாதாவது:-

மக்களின் பயன்பாட்டில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தும்பகோடு-திருநந்திக்கரை கால்வாய்கரை சாலையானது கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் கிடக்கிறது. எனவே, பொதுப்பணித்துறையினர் உடனடியாக சாலையில் கொட்டப்பட்டு கிடக்கும் மண் மற்றும் கழிவுகளை அகற்றி சாலையை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story