சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும்
திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும். மேலும் நடைபாதை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய பஸ் நிலையம்
திருவாரூர் புதிய பஸ் நிலையம் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த பஸ் நிலையமானது நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்குள் செல்வதற்கும், வெளியில் வருவதற்கும் இருவழி இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது.
இந்த இருவழி இணைப்பு சாலைகளில் கடந்த 3 ஆண்டுகளாக மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சேதமடைவதும், இதனை தொடர்ந்து தற்காலிக சீரமைப்பு செய்வதும் என பணிகள் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த பஸ்நிலையம் கட்டுமான பணிகள் குறித்து வழக்கு நிலுவையில் உள்ளதால் நிரந்தர பணிகள் மேற்கொள்ள முடியாமல் இருந்து வருகிறது.
ஆய்வு
இந்த சாலையின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த சாலை சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
தற்போது கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இருவழி இணைப்பு சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் கடந்து செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. மேலும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. குறிப்பாக பஸ் நிலையத்திற்குள் எந்த வாகனமும் சென்று வர முடியாத நிலையில் சாலை இருந்து வருகிறது.
மேலும் பள்ளங்களில் அரசு பஸ்கள் கடந்து செல்லும்போது பஸ்கள் பழுதடைகிறது. குறிப்பாக இந்த பஸ்நிலையத்திற்குள் செல்லும் சாலையில் நடைபாதை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள் சேதமடைந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.
இருபுறங்களிலும் நடைபாதை
எனவே சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை நிரந்தரமாக சீரமைத்து நடைபாதை அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கலைசெல்வம் கூறுகையில்,
திருவாரூர் புதிய பஸ் நிலையம் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ேசதமடைந்து உள்ளது. இந்த சாலையின் இருபுறங்களிலும் நடைபாதை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைப்பதுடன், நடைபாதை அமைத்து தர வேண்டும். திருவாரூர் பகுதிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.






