சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது


சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆதினக்குடி- இடையாத்தங்குடி சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் பஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டு வருவதால் விரைந்து சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

ஆதினக்குடி- இடையாத்தங்குடி சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் பஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டு வருவதால் விரைந்து சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த தடுப்பு சுவர்

திருமருகல் ஒன்றியம் ஆதினக்குடி- இடையாத்தங்குடி இடையே பண்டாரவாடை ஊராட்சி தென்பிடாகை காளியம்மன் கோவில் அருகே சாலையோரம் பெரிய வாய்க்காலில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. தற்போது இந்த தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இந்த நிலையில் பெரிய வாய்க்காலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவிரி நீர் வந்து சேர்ந்த நிலையில் வாய்க்காலில் தண்ணீர் ஓட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கரையோரம் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.

மாணவர்களுக்கு சிரமம்

இதனால் அவ்வழியே சென்று வந்த பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது. இதன் காரணமாக இடையாத்தங்குடி, கணபதிபுரம், கிடாமங்கலம், சேஷமூலை, ஏர்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பள்ளி- கல்லூரிக்கு சென்றுவர சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடைத்தெரு, வங்கி, அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்குகூட சென்று வர முடியாத நிலையில் உள்ளனர்.

சீரமைக்க கோரிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு இடிந்து விழுந்த தடுப்பு சுவரை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story